M. S. விஸ்வநாதன் நினைவு தினம் – ஜூலை 14

0
306

“படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற பாடல் வரியை உன்னிப்பாக யோசித்துப் பார்த்தால் நமக்கு ஒரு உண்மை புரியும். கடவுளின் மறுஉருவம் மனிதர்கள் என்பதை எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களுக்குள் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்றால், அவர்களுக்குள் அந்தக் கடவுளின் படைப்புத் திறமை இருப்பதும் உண்மைதான்.
படைப்புத் திறமையால் பாரில் உயர்ந்தவர் பல பேர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர்… என சகலகலா வித்தகராக தன்னுடைய படைப்புத் திறமையால் தன்னை உயர்த்திக் கொண்டதோடு, தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் உயர்த்தியவர் அவர். அதுவரை வழக்கத்தில் இருந்த முறைகளை உடைத்தெறிந்து, தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கியவர். “மெல்லிசை” என்ற புதிய சகாப்தத்தை தொடங்கியவர். இசையின் காற்றலைகளை பல சகாப்தங்களுக்கு மெல்லிசை மன்னராய் ஆண்டவர்.
வளரும் வயதில் தந்தையை இழந்து, தாயாரின் தற்கொலை முடிவிலிருந்து தாத்தாவால் காப்பாற்றப்பட்டு வறுமையில் பிடியில் சிக்கித் தவித்த காலங்களிலிருந்தே இசை ஆர்வம் அவரை விடாமல் துரத்தியது. அதுவே சம்பளம் ஏதும் இல்லாமல் சினிமா தியேட்டரில் அவரை முறுக்கு விற்கச் செய்தது. அப்படிச் செய்தால் இலவசமாக சினிமா பாடல்களை கேட்கலாம் அல்லவா!
துரோணரை மானசீகமாக மனதில் குருவாக ஏற்று வில்வித்தையை கற்ற ஏகலைவனின் கதையைப் போலவே இவரது கதையும். தன்னுடைய முதல் ஆசிரியரான நீலகண்ட பாகவதர் வீட்டிற்கு வெளியில் இருந்தே பல மாதங்களுக்கு பாடல்களை கேட்டுக் கற்றுக்கொண்டார். “மாணவன் தயார் நிலையில் இருக்கும்போது, ஆசிரியர் அவன் முன் தோன்றுவார்” என்பதுதானே மரபு. ஏதேச்சையாக அவரது இசைத் திறமையை கண்டுகொண்ட நீலகண்டர் அவரை உடனடியாக தன்னுடைய மாணவனாக ஏற்றுக்கொண்டார்.
அவருடைய கால கட்டத்தில் திரை இசைப்பாடல்கள் வாழ்க்கையின் பகுதியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் பல ஆழமான உண்மைகளை பாமரருக்கும் கற்றுக் கொடுத்தன. ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அந்த பாடல்கள் உடல் என்றால், அந்த உடலுக்கு உயிரைத் தந்தது அவரது இசை. கண்ணதாசனின் காவிய வரிகளுக்கும், வாலியின் வைர வரிகளுக்கும் பட்டை தீட்டியவர் அவர்.
அவருடைய இசை கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், அதி நுட்பமானவை. ஒரே பாடலில் இரண்டு மூன்று டியூன்களையோ அல்லது ஒரே ஒரு டியூனை வெவ்வேறு விதமாகவும் பயன்படுத்துவார். பல நேரங்களில் அவருடைய இசை, பாடலின் வரிகளுக்கு புதிய அர்த்தத்தை சேர்த்திருக்கிறது.
அவர் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது, பல ஜென்மங்களுக்கு அந்தப் பாடல்களோடு நமக்கு தொடர்பிருப்பதாக நம் இதயம் ஏங்குவதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான் என்னவோ, கர்நாடக சங்கீதத்தில் கரை தேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருதான “இசைப் பேரறிஞர்” விருதை தமிழ் இசைச் சங்கம் அவருக்கு வழங்கி கவுரவித்தது. அவர் இசையமைத்த காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான திரை இசைப் பாடல்கள் மட்டுமல்லாது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தன் இசையமைத்து பெருமை சேர்த்தவர்.
அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் “ச ரி க ம ப த நி” தான் என்னுடைய தாய்மொழி. திரை இசைச் சக்கரவர்த்தியாய் தமிழ்த் திரையுலகையும் தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். இசையமைப்பாளராக மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்பட்ட அவர் நல்ல பாடகரும் கூட. “ஹை பிட்ச் என்றால் விச்சு” என்ற சொலவடை அவரின் காலகட்டத்தில் வெகு பிரசித்தி.
அவர் இசையால் உயர்ந்தவர் மட்டுமல்ல; தன்னுடைய எளிமையான நடத்தையாலும் பணிவாலும்கூட உயர்ந்தவரே. தன்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டபோது மேடையில் பார்வையாளர்களோடு பார்வையாளராய் ஒதுங்கி நின்றார். புத்தகத்தின் முதல் பதிப்பை பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த இந்தி திரைப்பட உலகத்தின் புகழ் பெற்ற பழம்பெரும் இசையமைப்பாளர் நாஷத் அவர்களை தன்னுடைய மானசீக குருவாக கருதியதால், அவரின் முன்னால் உட்காருவதற்குக்கூட மறுத்து விட்டவர். புத்தகத்தின் முதல் பதிப்பை பெற்றுக்கொண்ட நாஷத் “நான் எம்.எஸ்.வி.யிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் என்னை அவருடைய குரு என்கிறார். ஆனால் நானோ அவருடைய மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றார். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்” என்பது உண்மைதானே.
“நன்றாக வாழப்பட்ட வாழ்க்கைக்கு மரணம் இல்லை”. அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவரின் படைப்புகள் காலத்தால் என்றைக்குமே அழியாதது.
அவரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் “படைப்பு மனிதனின் உயிர்நாடி”. ஒவ்வொரு நாளின் முடிவிலும் “நான் இன்றைக்கு என்ன படைத்திருக்கிறேன்” என்ற கேள்வியைக் கேட்காமல் தூங்கப்போகாதீர்கள். நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை உருவாக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஒருவரின் முகத்தில் புன்னகையை விளைவிப்பது, ஒருவரின் மனதில் நல்ல சிந்தனைகளை விளைவிப்பது, ஒருவரை உத்வேகப்படுத்தி அவர் மனதில் நம்பிக்கையை விளைவிப்பது… என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் கூட நீங்கள் இன்றைக்கு உருவாக்கிய விஷயங்களாக இருக்கலாம்.
ஜூலை 14 – M. S. விஸ்வநாதன் நினைவு தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here