தென் ஆப்பிரிக்கா நிறையவே மாறியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டல்கள் திறந்திருக்கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக தன் வாழ் நாளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக (27 ஆண்டுகள்) சிறையில் கழித்து தன் தேசத்திற்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமை கிடைக்க அரும்பாடுபட்டவர் இவர்.
குறிக்கோளும், எண்ணங்களும் ஒருசேர பயணிக்கும்போது வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை தன் வாழ்க்கையின் மூலம் உலகத்திற்கு உணர்த்திய அந்த போராளி நெல்சன் மண்டேலா.
ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என்று மண்டேலாவை வருணிக்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ. மண்டேலாவுடன் ரோபன் தீவுக்குச் சென்று பார்வையிட சென்ற அவரிடம், நீங்களும் மண்டேலாவைப் போல் தனிமைச் சிறையில் இருந்தவர்தானே என்று கேட்கப்பட்டபோது, அவசரமாக மறுத்தார் காஸ்ட்ரோ. நான் இருந்தது இரு ஆண்டுகள் மட்டும்தான். தயவு செய்து என்னை அவரோடு ஒப்பிடாதீர்கள். அவ்வாறு ஒப்பிட்டால் அது எனக்கு அவமானம் என்றார்.
1991ம் ஆண்டு காஸ்ட்ரோ கூறியது. ‘நேர்மையான மனிதர் என்பதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் தேவைப்பட்டால், நெல்சன் மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். எதற்கும் விட்டுக்கொடுக்காத, துணிச்சலான, அமைதியான, புத்திசாலியான, செயல்வேகம் கொண்ட ஒரு நாயகன் உங்களுக்குத் தேவைப்படுகிறாரா? இதோ மண்டேலா இருக்கிறார். அவரை நேரில் சந்தித்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்து சேரவில்லை. பல ஆண்டுகளாக நான் இதுகுறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஒரு அடையாளமாக நான் அவரைக் காண்கிறேன்’ என்றார்.
நிறவெறிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மண்டேலா கல்வியை அதிகம் நேசித்தார். கல்வி ஒன்றுதான் ஒரு நாட்டை மென்மேலும் வளர்த்துச் செல்லும் என்று திடமாக நம்பினார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் மண்டேலாவிடம் கேட்டக் கேள்வி இது, ‘தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, குழந்தைகளுக்காக நீங்கள் நிறைய நேரத்தைச் செலவிடுகிறீர்கள். குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோர் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய படிப்பினை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு நெல்சன் மண்டேலா, ’உண்மையில் கல்வி அறிவு இல்லாமல் உங்கள் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள முடியாது. எனவே குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தர வேண்டியதும், நாட்டுக்கு பங்களிப்பு செய்ய வேணடும் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது. என் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நான் அதைத்தான் செய்கிறேன். எனக்குத் தெரிந்ததைவிடவும் என் பேரக் குழந்தைகளுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. அதனால் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து உங்கள் குழந்தைகளிடம் திணித்துக்கொண்டே இருங்கள். அதுதான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை’ என்றார்.
80 ஆண்டுகால நிறவெறி ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் கறுப்பின அதிபராக 1994-ல் மண்டேலா பதவியேற்றார். 1999-ல் பதவிக் காலம் முடிந்த பின்னர் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.
தனது அறப்போராட்டத்தின் மூலமாக ஒரு தேசத்தின் விடுதலைக்கு காரணமாய் இருந்த நெல்சன் மண்டேலாவின் தன்னலமற்ற சேவைக்கு அமைதிக்கான நோபல் பரிசுகள் முதல் பல்வேறு விருதுகள் தானாய் வந்து சேர்ந்தன. இந்தியா சார்பில் இந்தியராய் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டதும் நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே.
தன் வாழ்க்கையின் மூலம், தன் போராட்டங்கள் மூலம், தன் சாதனைகள் மூலம், தன் அரசியல் பங்களிப்புகள் மூலம், ஏன், தன் தவறுகள் மூலமும் தென் ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவுக்கு, உலகுக்கு மண்டேலா தெரிவிக்க விரும்பும் செய்தி ஒன்றுதான். விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே என்று முழங்கிய மண்டேலாவின் ஆசை மிகவும் விசித்திரமானது. ‘நான் இறந்த பிறகு, ஒரு தெய்வத்தைப் போல என்னை முன்னிறுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. நல்ல குணங்களும், குறைகளும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக நினைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்’ என்றார்.
“எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மட்டுமே என்னை மதிப்பிடுங்கள்.” – நெல்சன் மண்டேலா.
நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் ஜூலை 18.













