கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 5 ஆம்னி பேருந்துகள் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இதில் 5 பேருந்துகளுமே சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகள் 100 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று காலையில் ஒரு பேருந்தில் தீ பிடித்தது. தீ வேகமாக பரவி 5 பேருந்துகள் எரிந்தன. இதில் 3 ஆம்னி பேருந்துகள் முழுமையாக எரிந்த நிலையில் 2 பேருந்துகள் லேசாக எரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 5 பேருந்துகளும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. முதல்கட்டமாக 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் மேலும் பல பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கோயம்பேடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தீ விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.