பக்தர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக, ஆபாச வீடியோ இணைப்பு அனுப்பிய, திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மேலும் ஐந்து பேர், அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்த மான, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி என்ற, தொலைக் காட்சியில், தினசரி காலையில், பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாழ்த்துகள் கூற விரும்பும் பக்தர்கள், தங்கள் விபரங்களை தேவஸ்தான தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல், அஞ்சல் அட்டை வாயிலாக அனுப்புவது வழக்கம்.அவர்களுக்கு பிரசாதம்,அட்சதை உள்ளிட்டவற்றை, தேவஸ்தானம் அனுப்பி வருகிறது.
இதுபோன்ற ஒரு பக்தருக்கு பிரசாதம் அனுப்பும் போது, தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவர், ஆபாச வீடியோ, ‘லிங்க்’ எனப்படும், இணைப்பு ஒன்றை அனுப்பினார். அதிர்ச்சியடைந்த பக்தர், இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளிக்க, தேவஸ்தானமும் கண்காணிப்புத்துறை மூலம் விசாரணையை துவக்கியது.அதில், பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததால், இதில் நேரடியாக தொடர்புடைய ஐந்து பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்














