சில நாட்கள், சில ஆண்டுகள், சில மாதங்கள், சிலரின் பிறப்புகள், சிலரின் இறப்புகளை நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்குப் பின்னும் ஒரு படிப்பினை இருக்கிறது. இதையெல்லாம் நாம் என்றாவது உணர்ந்திருப்போமா?
சிலரின் பிறந்த நாட்களையும், நினைவுதினத்தையும் நாம் கொண்டாடுவதற்கான நினைவூட்டல் எதற்காகவென்றால், அவர்கள் செய்த செயல்களை நினைவுகூர்வதற்காக, அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக. வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே சிறப்பு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன.
ஆனால், அந்த சிறப்பு தினங்களை நாம் எந்த வகையில் பார்க்கிறோம் என்பதுதான் இங்கிருக்கும் மிகப்பெரிய கேள்வியே. அந்த சிறப்பு தினங்கள் விடுமுறை தினங்களாக இருக்கும்போது, விடுமுறையை கொண்டாடும் நாளாக மட்டுமே அமைந்துவிடுகிறது. இல்லையெனில் புகைப்படம் வைத்து மாலையிட்டு, இனிப்பு கொடுத்து கொண்டாடி நம் இருப்பை சமூகத்திற்கு நிலை நாட்டிக் கொள்வோம்.
அந்த வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி என்று சொன்னவுடன், சர்வதேச எய்ட்ஸ் ஒழிப்பு தினம் என்று எளிதாக சொல்லிவிடுவோம். இது வெறுமனே எய்ட்ஸ் ஒழிப்பு தினம் மட்டும்தானா? இல்லவே இல்லை. நம் சுய ஒழுக்கத்தை ஆய்வு செய்வதற்கான நாளும்கூட.
எய்ட்ஸ் மட்டும்தான் உயிர்க்கொல்லி நோயா? என்று கேட்டால் இல்லவே இல்லை. கட்டுப்பாடாக இருந்தால், நோயை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவத்தால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லா நோய்களுமே கிட்டத்தட்ட உயிர்க்கொல்லி நோய்கள்தான். சர்க்கரை வியாதி ஆரம்பித்து, கிட்னி கல்லடைப்பு வரை தீர்க்கப்பட முடியாத நோய்கள்தான். உயிரைக்கொல்லும் இந்த நோயை தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் நவீன மருத்துவத்தின் வரையறை.
ஒரு நோய் குறித்தான பீதியும், பயமும் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுவது எதனால்? அந்த நோய் குறித்தான முறையான பின்புலம் நமக்குத் தெரிவதில்லை. அந்த நோய் குறித்தான போதிய விழிப்புணர்வை நாம் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்வதில்லை.
ஒரு நோயின் தீவிரம் வெறும் மருந்து மாத்திரைகளால் மட்டும் குறைந்துவிடாது. சுற்றியிருப்பவர்களின் அன்பு தேவைப்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் காட்டும் அன்பும், கரிசனமும்தான், நோயாளியின் உடலில் உள்ள நோய்க்கூறுகளையும், நோயின் தன்மையையும் முழுமையாக தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கிறது. அதேபோல நோயுற்றவர்களுக்கு நோயின் தன்மையானது குறைய வேண்டுமானால், அன்புக்குரியவர்களின் அரவணைப்பு மிக மிக அவசியமாகிறது. மருந்தின் செயல்பாடு ஒரு மடங்கு என்றால், பாதிக்கப்பட்டவர்கள் மீது நாம் காட்டும் அன்பும், அக்கறையும் இன்னொரு மடங்கு அவர்களை ஆரோக்கியத்தை நோக்கி உந்திச் செலுத்தும்.
எந்த ஒரு நோயும் மற்றவர்களுக்கு மட்டும்தான் வரும், நமக்கு வரவே வராது என்றில்லை. குறைந்தபட்சம் சமூகத்தில் அதிகபட்சமாக பேசப்படும் நோய்கள் குறித்த தன்மையை படியுங்கள். அதை குழந்தைகளுடன், நண்பர்களுடன் விவாதியுங்கள். உங்களுடைய விவாதமானது அந்த நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை உங்களுக்குள் ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒரு படி நிலை என்றால், அடுத்தபடி நிலை அது நம்மை பாதிக்காத வண்ணம் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது. இந்த சுய ஒழுக்கம்தான், மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. பாதித்த நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
அந்த வகையில் சுய ஒழுக்கத்தை, சுய கட்டுப்பாட்டை, பாதிக்கப்பட்ட நோயாளிகளை புறக்கணிக்காமல் அவர்கள் மீது அதிகபட்ச அக்கறை காட்டுவது உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் நினைவுபடுத்துவதாய் அமையும் நாளாக டிசம்பர் முதல் தேதி விளங்குகிறது.
டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினம்.













