சிலரின் வாழ்க்கை மட்டும்தான் பாடமாகும். சிலரின் வாழ்க்கை மட்டும்தான் படிப்பனையாகும். சிலரின் வாழ்க்கை மட்டும்தான் போற்றுதலுக்குரியதாக இருக்கும். சிலரின் வாழ்க்கை மட்டும்தான் கொண்ட்டாட்டமானதாக இருக்கும்.
ஆனால் இவருடைய வாழ்க்கை இவை அத்தனை அம்சங்களும் நிறைந்ததாய் அமைந்திருக்கிறது.
இசைத்துறையில் சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.
சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனைப் பட்டியல் இன்னும் நீளும்.
கே.ஜே. ஜேசுதாஸ் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இசைக்கலைஞர் என்று சொன்னால் மிகையாகாது. சில நேரங்களில் இவரது பாடல்கள்தான் நமக்கு ஆறுதல் தந்திருக்கும். இவரது பாடல்கள்தான் சில நேரங்களில் வாழ்க்கையில் உந்துதலை ஏற்படுத்தியிருக்கும். இவரது பாடல்கள்தான் இறைவனோடு ஒன்றக்கூடிய மனோ நிலையை நமக்குள் ஏற்படுத்தியிருக்கும். இவரது பாடல்கள்தான் சில நேரங்களில் துவண்டு கிடந்த நம் மனதை வாஞ்சையாய் தடவிக் கொடுத்திருக்கும்.
யாருடைய குரலிலும் இல்லாத ஒரு விஷயம் இவரது குரலில் மட்டும் எப்படி? இவரது குரல் மட்டும் ஏன் நம்மை இந்தளவிற்கு வசீகரிக்கிறது என்றெல்லாம்கூட நாம் பல நேரங்களில் யோசித்திருப்போம்.
எதில் நீங்கள் அதிக நேரம் முதலீடு செய்கிறீர்களோ அது வளரும். இது மிகப்பெரிய தத்துவம் என்பது அனுபவித்தவர்கள் மட்டுமே உணர்வார்கள். ‘படிப்பை பற்றி கவலைப்படாதே, சங்கீதத்தைப் பற்றி கவலைப்படு, அதில் அதிக நேரம் செலவிடு’ என்று அவர் தந்தை கொடுத்த அறிவுரைதான் தன்னை இந்தளவிற்கு வளர்த்திருக்கிறது என்று பல நேரங்களில் ஜேசுதாஸ் கூறியிருக்கிறார். அந்த அறிவுரையை பெறும்போது ஜேசுதாஸின் வயது 5.
சங்கீதத்தில் அவர் செய்த அதிக நேர முதலீடுதான், சங்கீதம் என்ற ஒன்று ஜேசுதாஸை உலகப் பிரசித்திப் பெற்ற இசைக் கலைஞனாக வெளிக்கொணர்ந்திருக்கிறது.
ஜேசுதாஸ் என்ற இசைக் கலைஞனின் வாழ்க்கையை பார்க்கும்போதெல்லாம், எதில் நாம் அதிக நேரம் முதலீடு செய்கிறோமோ, அந்த விஷயம் நம்மை பெரிய அளவில் வளர்க்கும் என்ற எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும். ஒருமுறை ஜேசுதாஸிடம் நிரூபர் கேட்டக் கேள்வி இது, “பல ரசிகர்கள் உங்கள் பாடலை கேட்கும்போது அழுகை வருகிறது, என்னை நான் மறந்துவிடுகிறேன். என்றெல்லாம் புகழ்கிறார்களே, அந்த நேரத்தில் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?” என்றார்.
“அந்த மாதிரி நேரங்களில் மனம் மிகவும் மகிழ்ச்சியடையும். அதே நேரத்தில் மனதிற்குள் ஒரு இனம் புரியாத பயமும் தொற்றிக்கொள்ளும், அவர்களை என் பாடல் மூலம் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தவேண்டும் என்று ஆசைப்படுவேன். அதற்காக கூடுதல் நேரம் என் பயிற்சியில் செலவு செய்வேன். சங்கீதத்தில் நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை இன்னும் தீவிரமாக கற்றுக்கொள்ள ஆரம்பிப்பேன்” என்றார். எந்த நிலைக்கு வந்தபோதிலும், உங்களுக்குள் இருக்கும் மாணவர் உயிர்ப்புடன் இருக்கும்போது அங்கு வளர்ச்சி இயற்கையாய் நிகழும் என்பதற்கு இந்த மாபெரும் இசைக்கலைஞன் மாபெரும் உதாரணம்.
அதிசய ராகம்… ஆனந்த ராகத்தையே பாக்கியமாகக் கொண்ட இசைக் கலைஞன் கே.ஜே. ஜேசுதாஸின் பிறந்த தினம் ஜனவரி 10












