மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம் – ஜனவரி – 15

0
284

“அவர்… மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, மக்களை நேசிப்பதற்காகவே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். போராட்டங்களின்போது நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டார். பசியால் வாடியவர்களுக்கு உணவளித்தார். உடுக்க உடையில்லாமல் தவித்தவர்களுக்கு உடையளித்தார். ஜெயிலில் மனச்சுமையுடன் வாடியவர்களுக்கு ஆறுதல் அளித்தார்… – இப்படித்தான் நான் இறந்த பிறகு என்னை மக்கள் நினைவுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய புகழை நானே தம்பட்டம் அடித்துக்கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. நீதி வேண்டி, நியாயம் வேண்டி, அமைதி வேண்டி நான் தம்பட்டம் அடித்தேன் என்று சொல்லுங்கள். எனக்குப் பிறகு விட்டுச் செல்ல நான் பணத்தையும், ஆடம்பரப் பொருட்களையும் சேர்த்து வைக்கவில்லை. அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை மட்டுமே நான் விட்டுச் செல்கிறேன்.”
இப்படி தன் மரண அறிக்கையைக் கூட தயார் செய்துவிட்டே போனார் அவர். உங்களின் மரணத்திற்குப் பின்னால் எதை விட்டுச் செல்லப் போகிறீர்கள் என்பது முக்கியம் இல்லையா?
நீங்கள் கிறிஸ்துவின் போதனைகளின் வழி நடக்காமல், கிறிஸ்துவை நேசிப்பதால் மட்டுமே உண்மையான கிறிஸ்துவனாக மாறிவிட முடியாது என்பது உண்மைதானே? கிறிஸ்துவின் மேல் பேரன்பு கொண்ட அவர், கிறிஸ்துவின் போதனைகளையே தன்னுடைய கொள்கைகளாகக் கொண்டார். ஆரம்பக் கட்டங்களில் தன்னுடைய பாதுகாப்பிற்காக தன் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த அவர், ‘அகிம்சை’ என்ற வார்த்தையை ஓரிருமுறை கேள்விப்பட்டிருப்பார், அவ்வளவுதான். ஒரு கட்டத்தில் அவருடைய வாழ்க்கை வழிகாட்டிகளில் ஒருவர் காந்தியைப் பற்றியும், அகிம்சை வழியின் சக்தியைப் பற்றியும் எடுத்துச் சொன்ன பிறகு, தன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளும் பழக்கத்தையே விட்டுவிட்டார். தன்னுடைய இந்தியப் பயணத்தின் இறுதி நாளில் வானொலியில் அவர் கொடுத்த அறிக்கை இதுதான், “மனித உரிமைகளுக்காகவும், நியாயத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடுவதற்கு சிறந்த ஆயுதம் அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கம்தான் என்ற நம்பிக்கையை இந்த இந்தியப் பயணம் என்னுடைய மனதில் மிகவும் ஆழமாக விதைத்து விட்டது”.
அவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. தந்தையாரால் மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டார். “ஏன் குழந்தையைப் போட்டு இப்படி அடிக்கிறீர்கள்” என்று ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரர் கேட்க அதற்கு அவருடைய தந்தையார் சொன்ன பதில், “நான் அவனை அடித்து அவன் மரணத்தின் வாயிலுக்கே சென்றாலும், மரணத்தின் விளிம்பிலும் அவன் ஏதோ ஒரு விஷயத்தை சாதித்து விட்டுத்தான் செல்வான்”. கறுப்பினத்தைச் சேர்ந்த அவருடன் விளையாடக்கூடாது என்பதற்காக அவரது உயிருக்குயிரான நண்பன் வேறொரு பள்ளிக்கு அனுப்பப்பட்டதால் ஆரம்பப்பள்ளி வருடங்களில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் அனுபவித்த இனவெறிப் பாகுபாட்டு வன்முறைகளால் அவமானத்தில் கூனிக் குறுகிய அவர், குற்றவுணர்ச்சியில் தன்னுடைய 12வது வயதில் 2வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஒருமுறை பேருந்து பயணத்தின்போது, சக பயணிகளாக உடன் பயணித்த வெள்ளையர்கள் உட்காருவதற்காக, அவரும் அவருடைய ஆசிரியரும் இருக்கையிலிருந்து எழுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வு அவருடைய மனதை ஆழமாகப் பாதித்தது. அந்தக் கோபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை தொடராமல் சில ஆண்டுகள் முடங்கிப்போனார். அவ்வளவு ஏன்! ஒருமுறை போராட்டத்தின்போது அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறையில் கூட அவர் வெள்ளையர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடாது என்று நினைத்த ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரை உடனேயே ஜாமீனில் விடுவித்தார். தான் அனுபவித்த கொடுமைகளை தன் சமூகம் பெறாதிருக்க, பாகுபாடில்லாத ஒரு சமூகத்தை கனவு கண்டார்.
“நிச்சயம் ஒருநாள் என்னுடைய மக்கள், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற புரிதலுடனும், சுதந்திரத்துடனும் வாழ்க்கையை வாழ்வார்கள். முன்னாள் அடிமைகளின் மகன்களும், அவர்களை அடிமைப்படுத்தியிருந்த தலைவர்களின் மகன்களும் சகோதர மனப்பான்மையுடன் ஒன்று கூடி குலவுவார்கள். ஒடுக்கப்பட்டு இருக்கும் என்னுடைய நகரம் சுதந்திர மழையில் நிச்சயம் நனையும். என்னுடைய நான்கு குழந்தைகளும் அவர்களுடைய தோலின் நிறத்தைப் பார்த்து மதிப்பிடப்படாமல், அவர்களின் குணநலன்களின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படுவார்கள்” என்று தன் கனவுகளை விசாலமாக்கினார்.
அவருடைய கனவுகள் யாவும் இன்று நனவாகி, கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபராக பதவியேற்றதின் மூலம், மக்களின் மனங்களில் என்றும் மன்னராய் வாழ்வார் மார்ட்டின் லூதர் கிங் கனவு நனவாகியிருக்கிறது.
இருளை இருளால் விரட்டியடிக்க முடியாது. ஒளியால் மட்டுமே அது முடியும். அதுபோல வெறுப்பை வெறுப்பால் விரட்டியடிக்க முடியாது. அன்பால் மட்டுமே அது முடியும் – மார்ட்டின் லூதர் கிங். ஜனவரி – 15, மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here