பாரதியார் பிறந்த தினம் – டிசம்பர் 11

0
266

உங்களுடைய வேலையே உங்களுக்கு முகவுரையாக மாறவேண்டும். அந்தக் குறிப்பிட்ட வேலையைச் சொன்னால் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் ஒரு நொடி உங்களின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும். அந்த சிறப்பை பெற்றவர்கள் உலகில் சில பேர். அந்த சில பேரில் ஒருவர்தான் இவர்.
“பாட்டுக்கு…” இந்த அடைமொழியை பாதியில் விட்டு விட்டாலும், உலகத்தின் கண்களுக்கு தெரியும் முதல் உருவம் அவருடையதாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்க் கவிதை உலகிற்கே இவரின் கவிதைகளே முகவுரை என்றும் கூட சொல்லலாம்.
நிலை உயரும்போது உள்ளத்தில் பணிவு வேண்டுமாம், உண்மைதான். ஆனால் அன்பின் மிகுதியால் “நின்னைச் சரணைடந்தேன்” என்று பணியவும் தெரிய வேண்டும். கொண்ட கொள்கையின் ஏற்றத்தால் “அன்னியர் தமக்கடிமை யல்லவே – நான் அன்னியர் தமக்கடிமையல்லவே” என்று சீறிப் பாயவும் தெரிய வேண்டும். மண்ணில் மனிதராகப் பிறந்தவர்கள் “செய்யும் செயல்கள் அத்தனையிலும் என்னைப்போல் நான் ஒருவனே” என்ற மிடுக்குடன் வாழ்க்கையை வாழவேண்டும். சும்மாவா சொன்னார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று.
மதுரை தமிழ்ச் சங்கத்தினர் தமிழ் மற்றும் தமிழகத்தின் பெருமை என்ற பெயரில் கவிதைப்போட்டி வைக்கிறார்கள். அந்தப் போட்டியிலே “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற கவிதைக்கு மூன்றாவது இடமும், நூறு ரூபாய் சன்மானமும் கிடைக்கிறது. முதல் இரண்டு இடத்தையும் பிடித்தவர்கள் யார் என்று கூட இன்றைக்கு நமக்குத் தெரியாது. காலப்போக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவரின் கவிதைகள் முதன் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்ட கவிதைகள் என்ற பெருமையை அடைகிறது. உங்களுடைய ஆரம்பம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். சொல்லப்போனால் உலகத்தின் புகழ் பெற்ற அத்தனை பேரின் ஆரம்பமும், உங்களுடைய ஆரம்பத்தை விட மிகச் சிறியதாக மட்டுமே இருந்திருக்கிறது. “நீங்கள் வரலாறு படிக்கலாம் அல்லது படைக்கலாம்”… முடிவு உங்கள் கையில் மட்டுமே…
“நீங்கள் சொன்னால் இந்த உலகம் எந்த மறுப்பும் இல்லாமல் தலையாட்ட வேண்டும்; அதற்கு நீங்கள் சொல்லும் விஷயத்தில் நீங்கள் தலைசிறந்தவராக இருக்க வேண்டும்”. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று இவர் சொன்னபோது, ஒட்டுமொத்த உலகமும் இவர் சொன்னதை எந்த மறுப்புமில்லாமல் தலையாட்டி ஏற்றுக் கொண்டது. காரணம்… தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு, வங்காளம், இந்தி, கட்ச் உட்பட பதினான்கு மொழிகளில் தனிப்புலமை பெற்றிருந்த இவர் தமிழை நேசித்தார் என்பதை விட ஒவ்வொரு நொடியும் தமிழை சுவாசித்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
“ஆத்ம வலிமை வாய்ந்த மாமனிதர்களின் விருப்பத்தை, பிரபஞ்சம் தன்னுடைய கட்டளையாய் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்” என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மை. “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” (19௦8ஆம் ஆண்டு எழுதப்பட்ட பாடல்) என்ற இந்த மகாகவியின் விருப்பத்தை, கனவை பிரபஞ்சம் தன்னுடைய கட்டளையாய் ஏற்று, இந்திய தேசத்தை பின்னாளில் அடிமைத்தளையிலிருந்து கட்டவிழ்த்தது.
இருபத்தோராவது நூற்றாண்டிலும் கரம் பிடித்த மனைவியை தன்னுடைய பாதியாக பார்க்காமல், அடிமையாக பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். பாரதி தன் மனைவி செல்லமாவுடன் வெளியே போகும்போது எப்பொழுதும் தோளில் கையைப் போட்டுக்கொண்டுதான் கூட்டிப்போவார். அதைப் பார்த்தவர்கள் “பயித்தியங்கள் உலவப் போகின்றன” என்று கிண்டலடிக்க அப்போது “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை…” என்று பாடிய பாரதி, தான் பாடியதை வாழ்ந்து காட்டியதோடு பெண்மையின் பெருமையை உயர்த்தியும் காட்டினார்.
“கடவுள் வானத்தில் வசிக்கும் உருவமல்ல. நம்மிடையே நமக்குள் நிறைந்திருக்கும் அருவம்” என்பதை உணர்ந்த அவர் பக்தியின் உச்சத்தில் கண்ணனை நண்பனாய், அன்பனாய், சேவகனாய், குழந்தையாய் பாவித்து கவிதை வடிக்கிறார்.
காக்கையின் சிறகிலும், பார்க்கும் மரங்களிலும் கடவுளின் உருவத்தை பார்க்கும் அவர், கடவுள் நம்பிக்கையில் காலத்தை கழித்த அவர், சின்ன வயதிலேயே நண்பனின் மகன் இறக்க “நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிவாருண்டோ” என்று அந்த கடவுளிடமே கேள்விக் கணை தொடுக்கிறார்.
பாரதியின் கவிதைகளோடு, அவர் வாழ்க்கையையும் நாம் உள்வாங்குவோம்…
உங்கள் வாழ்க்கையே, உங்களின் செய்தியாக இருக்க வேண்டும். ”கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்று பாடிய பாரதி “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சேராதிருத்தல்” என்று ஒவ்வொரு நொடியும் கவிதையையே சுவாசித்து வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் கவியில் வீறு கொண்டு எழும் நாமும் சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்.

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனி, சிந்துக்குத் தந்தை” – பாரதிதாசன்.

பாரதியார் பிறந்த தினம் – டிசம்பர் 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here