அன்னை தெரசா பிறந்த தினம் – ஆகஸ்ட் 26

0
263

வாழ்க்கையில் எத்தனையோ தருணங்கள் உங்களை சாதாரணமாகக் கடந்து போனாலும், உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் புரட்டிப் போடக்கூடிய அந்த ஒரு மாற்றம், ஒரே ஒரு கண நேரத்தில் நிகழ்ந்துவிடக்கூடும். உங்கள் வாழ்க்கையையே மாற்றும் அந்த ஒரு தருணம், உங்கள் வாழ்க்கையை மாற்றுவதின் மூலம் ஏதோ ஒரு விதத்தில் இந்த உலக வரலாற்றையே மாற்றி விடக்கூடும்.
“பயணத்தின் ஆரம்பத்தில் நீங்கள் என்ன நம்பிக்கைகளை கொண்டிருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கைகளே உங்கள் பயணத்தை வடிவமைக்கின்றன”. ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணன், “கன்னியாஸ்திரியாகப் போகிறேன் என்ற உன் முடிவில் இன்னும் உறுதியாக இருக்கிறாயா” என்று கேட்டு எழுதி அனுப்பியிருந்த கடிதத்திற்கு, சமூக சேவையில் அளவில்லாத பற்று கொண்ட அவர் அனுப்பிய பதில், “நீ இரண்டு மில்லியன் வீரர்களை நிர்வகிக்கும் மன்னனுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறாய். நான் உலகையே நிர்வகிக்கும் இறைவனுக்கு சேவை செய்யப் போகிறேன்…” ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற அவரது நம்பிக்கையே அன்னை தெரசா என்னும் தன்னலமற்ற தேவதையை இந்த உலகத்திற்கு பரிசாக தந்தது.
அயர்லாந்தைச் சேர்ந்த ‘சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டொ’ என்ற கன்னியாஸ்திரிகள் அமைப்பின் மூலமாக, தன் சொந்த விருப்பத்தின் பேரில் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு கத்தோலிக்க திருச்சபைக்கு வந்து சேர்ந்த ஆக்னஸின் பெயர், திருச்சபையின் விதிமுறைகளின்படி தெரசா என்று மாற்றப்பட்டது. சில காலம் ஆசிரியப் பணியோடு சமூக சேவையையும் செய்து வந்த அவர், முழுநேர சமூக சேவை செய்வதற்கு ஆசிரியப்பணி தடையாக இருந்ததால் அதை ராஜினாமா செய்தார். வெறும் ஐந்து ரூபாய் பணத்துடன் லொரேட்டொ அமைப்பை விட்டு வெளியேறிய அவர், கல்கத்தா நகரத்தில் வீதி வீதியாக நடந்து சென்று குடிசை வாழ் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். வாழ்க்கையில் எத்தனையோ தருணங்கள் உங்களை சாதாரணமாகக் கடந்து போனாலும், உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் புரட்டிப் போடக்கூடிய அந்த ஒரு மாற்றம், ஒரே ஒரு கண நேரத்தில் நிகழ்ந்துவிடக்கூடும். உங்கள் வாழ்க்கையையே மாற்றும் அந்த ஒரு தருணம், உங்கள் வாழ்க்கையை மாற்றுவதின் மூலம் ஏதோ ஒரு விதத்தில் இந்த உலக வரலாற்றையே மாற்றி விடக்கூடும். தன் வீட்டின் முன்னால் நோயால் மயங்கி விழுந்து கிடந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், பணவசதி இல்லாததால் சிகிச்சையளிக்க கால தாமதமாகி அந்தப் பெண் உயிரிழப்பதைப் பார்க்கிறார் அன்னை தெரசா. அந்த ஒரு தருணமே ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ அறக்கட்டளையின் ஆரம்பத்திற்கு நெருப்புப் பொறியாக மாறுகிறது.
அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு தன்னுடைய சேவை மையத்திற்கு நிதி திரட்டுவதற்காக யாசகம் கேட்டு கிளம்பி விடுவார் அவர். அப்படி ஒருநாள் சென்றபோது, கடைக்காரர் ஒருவரிடம் அன்னை தெரசா, தன்னுடைய மையத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது யாசகம் அளிக்குமாறு கைகளை நீட்டிக் கேட்டுக் கொண்டிருக்க, அந்தக் கடைக்காரர் கோபத்துடன் தான் வாயில் போட்டு மென்று கொண்டிருந்த வெற்றிலையை அன்னையின் கையில் துப்பினார். அன்னையும் அதை பொறுமையுடன் துடைத்துவிட்டு, “இதை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்காக வேறு ஏதாவது தாருங்கள்” என்று சொன்னார். சகிப்புத்தன்மையின் மறு உருவமான அன்னையிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய அந்தக் கடைக்காரர் தன்னுடைய கல்லாவில் இருந்த மொத்தப் பணத்தையும் கொடுத்தார்.
1979வது வருடம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அவரிடம், “உலகத்தில் அமைதியை நிலைநாட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். “வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தினரை நேசியுங்கள். பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் நான் அந்த கொடிய வறுமையை பார்க்கிறேன். நான் வீதியில் பசியோடு வாடும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது அவனுக்கு உணவளித்து அவன் வயிற்றுப்பசியை போக்கி விடுகிறேன். ஆனால், அன்பில்லாமல், ஆதரவில்லாமல் இந்த சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்ட அவனுடைய உணர்வுப்பூர்வமான வறுமைக்கு எனக்கு தீர்வு தெரியவில்லை. அன்பின் வறுமையே வறுமைகளில் மிகவும் கொடுமையானது”.
இறைவனின் பிரார்த்தனையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் அவர். அவருக்குப் பிறகு மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய சகோதரி நிர்மலாவிடம், “நீங்கள் அன்னை தெரசாவிடமிருந்து கற்றுக் கொண்ட முதன்மையான விஷயம் என்ன” என்று கேட்டபோது, “அவருடைய பிரார்த்தனை முறை. அவர் பிரார்த்தனை செய்வதைப் பார்க்கும்போதே எனக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தோன்றும்…” என்று சொன்னாராம். நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதை விட, நீங்கள் வாழும் விதத்தைப் பார்த்து உலகம் அதிகம் கற்றுக்கொள்ளும் என்பதுதானே உண்மை!
“பிறப்பால் நான் ஒரு ஆல்பேனியன், குடியுரிமையில் நான் ஒரு இந்தியப் பிரஜை, நம்பிக்கையில் நான் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி… என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தின்படி நான் இந்த உலகத்திற்கு சொந்தமானவள், என்னுடைய இதயத்தின் மொழியில், நான் கிறிஸ்துவின் இதயத்தில் குடியிருப்பவள்…” என்றே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் அன்னை தெரசா. “அந்த இறைவனின் கையில் இருக்கும் ஒரு சிறிய பென்சில் தான் நான். அவனுக்குப் பிடித்த மாதிரி என் மூலம் அவன் எழுதுகிறான், அவ்வளவுதான்…” என்று அடிக்கடி சொல்வார். உங்கள் கடவுளின் சக்தி, உங்களுடைய முயற்சி, உங்கள் கடவுளின் சக்தியின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை… இவை மூன்றும் இணையும்போது உங்கள் வாழ்க்கையின் நோக்கங்கள் அத்தனையும் குறைவில்லாமல் நிறைவேறும் என்பதற்கு அவரது வாழ்க்கையே உதாரணம்.
என்னுடைய ஏழை சகோதர சகோதரிகளுக்கு நீ என்ன செய்தாயோ, அதை நீ எனக்கே செய்தாய் என்பதே சத்தியம், மாத்யூ 25:4௦. ஆகஸ்ட் 26, அன்னை தெரசா பிறந்த தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here