இந்தியாவின் கலாச்சார பலம் அதன் ஆன்மீகப் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்த நாட்டின் ஆன்மீக சக்தியை நமக்குள் கிரகித்து உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டாமா?
எனதருமை இந்தியாவே! ஆண்டுகள் 1௦௦௦௦ ஆனாலும் பொலிவு மாறாமல் திகழ்கின்றாய். பல சோதனைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும், எத்தனையோ விஷயங்கள் உன்னை அரித்திருந்தாலும் உன் இயல்பு நிலையும் தனித்தன்மையும் இன்னும் மாறவேயில்லை. பலவிதமான கலாச்சார படையெடுப்புகள், வெளிநாட்டு நாகரிகங்களின் தலையீடல்கள், மொழித் திணிப்புகள், அரசு முறை மாற்றங்கள் என எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்திருந்தாலும் உன் பாரம்பரியத்தின் சாரம் அதன் வீரியத்தை இழக்கவில்லை. நீ எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததும் இல்லை. நீ எந்த நாட்டின் கலாச்சாரத்தையும் அழித்ததாக வரலாறும் இல்லை. நீ வந்தவரை அன்னையாக அரவணைத்து அவரை வாழ்வாங்கு வாழ வைப்பவள்.
பொருள்தேடி அலைந்த உலகத்துக்கு யோகக் கலை, தியானம், ஆயுர்வேதம், பூஜ்ஜியம், கணித விஞ்ஞானம், அறுவை சிகிச்சை முறைகள், சதுரங்க விளையாட்டு, எண்ணற்ற தற்காப்பு கலைகள் உட்பட விலையற்ற வளங்களை அளித்தாய். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான தட்சசீலமும், நாளந்தாவும் உன்னில் பிறப்பெடுத்தவைதான்.
இப்படி எண்ணி எண்ணிப் பார்த்து இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட ஆயிரம் காரணங்கள் நமக்குண்டு! நம்மைப் பற்றி இந்தியா பெருமைப்பட நாம் என்ன செய்திருக்கிறோம்?
“இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்று இருந்தது ஒரு காலம். இன்று நாம் நினைக்கும் விஷயங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகிறது என்றால் அதற்கு காரணம் ஊர் பேர் தெரியாத, முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஆசைகளை துறந்து, உயிரையே பணயம் வைத்து தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியதுதான். இன்றைக்கு நம் வாழ்க்கையில் அமைதியும், சமாதானமும் நிலவுகிறது என்றால் அதற்கு காரணம் தம் குடும்பங்களைப் பிரிந்து, தங்கள் கடமையைக் கண் போல மதித்து நாட்டைப் பாதுகாக்கும் நம் இராணுவ வீரர்கள்தான். நாட்டிற்காக நாம் உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. சுயநலத்தைத் தாண்டி சிந்தித்து இந்தியாவை சர்வதேசங்களின் வரிசையில் முதல் இடத்திலேனும் கொண்டு வரலாம் இல்லையா?
நம்முடைய கனவுகளும், லட்சியங்களும் பொதுநலத்தின் பாதையில் இருக்கும்போது, நம்முடைய சொந்தத் தேவைகளும் தானாக நிறைவேற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் உண்டோ? பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்ட போது, “என்னை அவமதித்து விட்டார்களே” என்று நினைக்காமல், “எனக்கே இந்த நிலைமை என்றால், என் தேசமும் இப்படித்தானே கூனிக் குறுகிக் கிடக்கிறது” என்று தன் தேசத்தை முன்வைத்துப் பார்த்ததால்தான் அந்த சாதாரண ஆத்மா மகாத்மாவாக மாறியது. நம் உழைப்பின் பலனை நம்மால் அனுபவிக்க முடியாதெனினும், நம் வருங்கால சந்ததியினர் நிச்சயம் பயனடைவார்கள்.
இந்தியாவின் கலாச்சார பலம் அதன் ஆன்மீகப் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்த நாட்டின் ஆன்மீக சக்தியை நமக்குள் கிரகித்து உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டாமா?
நன்றாகப் படித்து இறக்கை முளைத்தபின் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று உங்கள் வளத்திற்காகவும், அந்த நாட்டின் வளத்திற்காகவும் உழைக்கிறீர்கள். பிள்ளையை சீராட்டி வளர்க்கும் தாய், தன் குழந்தை எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும் தன் உயிருள்ளவரை அவனை ஒரு குழந்தையாக மட்டுமே பாவித்து பாசம் பொழிவாள். அதுபோல்தான் நம் அன்னை பூமியும். வெளிநாடுகளில் சென்று நீங்கள் வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தருவதும் அவள்தான். நாளைக்கு நீங்கள் எந்த நிலைமையில் திரும்பி வந்தாலும் கேள்வி கேட்காமல் உங்களை உச்சி முகர்ந்து ஏற்றுக்கொள்ளப்போவதும் அவள்தான். சர்வதேசங்களுக்கு சென்று வளரும் நீங்கள், வளர்ந்தபின் பிறந்த நாட்டுக்கு வந்து ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்யலாமே? இந்த நாட்டுக்கு நீங்கள் பட்ட கடனுக்குப் பரிகாரமாக ஏதேனும் செய்யலாமே? நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் உங்கள் வேர் உங்கள் தாய்நாட்டில் ஊன்றி இருக்கட்டும்.
“இந்தியர்கள் அப்படித்தான்” என உலகம் ஏளனம் செய்யும் வகையில் இனி எதையுமே செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்போம். “இவனைப் பெற்றதற்கு என்ன தவம் செய்தேன்” என இந்தியா மகிழும் வண்ணம் இனி நம் செயல்கள் இருக்கட்டும். நாம் செய்யும் சின்னச் சின்ன நன்மைகளும்கூட நாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான பங்களிப்பாக இருக்கும். நம் இன்ஃபினி வாசகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நோக்கத்துடன் பயணித்தாலே நம்மால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவர முடியும்.
“இந்தியா என் தாய்நாடு. என் நாட்டுக்கும் என் மக்களுக்கும் நான் என்னை அர்ப்பணிக்கிறேன்” – இந்திய தேசிய உறுதிமொழி. ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம்.














