சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி விஜயலட்சுமி(46). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 15 ஆம் தேதியன்று விஜயலட்சுமி தனது 3 குழுந்தைகளுடன் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் பயணித்தார். திருவொற்றியூரில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் விஜயலட்சுமி இருந்த பெட்டியில் ஏறிய மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 7 1/2 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
உடனடியாக விஜயலட்சுமி சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் ரயில்வே கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் மேற்பார்வையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பரந்தாமன், காவலர்கள் வீரபாகு, சேக் உஸ்மான், சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது வழிப்பறி கொள்ளையர்கள் விட்டு சென்ற செருப்பு கிடைத்தது. மேலும் பழைய குற்றவாளிகளின் படங்களை விஜயலட்சுமியிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் நடந்த அன்று ரயில் நிலையத்திற்கு அருகே வந்து சென்றது இதே பகுதியில் அடிக்கடி செல்போன் பறிப்பில் ஈடுபடும் தினேஷ் என்கிற கிளி(19) என தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையின்போது ரகசிய தகவலாக கிடைத்தது.
உடனடியாக திருவொற்றியூர் பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு கஞ்சா போதையில் இருந்த தினேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஜயலட்சுமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 7 1/ 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் நகை பறிப்பு தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நகை பறிப்பு சம்பவம் நடந்த உடன் உடனடியாக தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினோம். சம்பவத்தை சவாலாக ஏற்று கொண்ட தனிப்படையினர் உடனடியாக செயல்பட்டு கொள்ளையனை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
பெண்கள் வெளி பயணங்களின்போது தாங்கள் அணியும் நகைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் காவல் துறை முழுமையாக மக்களுக்கு ஒத்துழைப்பு செய்யும்.
தற்போது மின்சார ரயில், ரயில்களில் கஞ்சா கடத்தல், ரேசன் அரிசி கடத்தல் போன்றவற்றை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைத்து ரயில்வே போலீசார் பணியாற்றி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த தனிப்படை காவலர்களான வீரபாகு, சேக் உஸ்மான், சிவா ஆகியோரை கண்காணிப்பாளர் இளங்கோ பாராட்டி வெகுமதியளித்தார்.













