டாஸ்மாக் விற்பனையாளர்களாக திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி(47) , ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இருவரும் வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதை உச்சத்தில் இருந்த 2 பேர் கடைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இரண்டு குவாட்டர் மதுபானங்களை வாங்கியுள்ளனர். கடை விற்பனையாளர் கோபி மதுபானத்திற்குரிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் ஓசியில் சரக்கு கொடு. பணம் தர முடியாது” என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்தால்தான் மதுபானம் கொடுக்க முடியும் என்று விற்பனையாளர்கள் கூறினர். ஆனால் மறுபடியும் அந்த நபர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் விற்பனையாளர்களுக்கும், மதுபோதையில் இருந்த நபர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மர்ம நபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபியின் முகத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த நபர்கள் இருவரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் படுகாயமடைந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளையும் டாஸ்மாக் பணியாளர்கள் மூடினார்கள். இதனால் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.














