கன்டெய்னர் லாரி விபத்து முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம்;

0
266

கன்டெய்னர் லாரிகளை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறும் லாரிகளுக்கு விதிகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த குழு அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையை சேர்ந்த ஜே.எஸ். துறைமுக கன்சார்டியம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய துறைமுகங்களுக்கு வரக்கூடிய கன்டெய்னர் லாரிகள் மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றுகின்றன. இதனால் சென்னையில் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் அதிக பாரம் ஏற்றுவது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதாவது 6 சக்கர வாகனம் கொண்ட கன்டெய்னர் லாரிகள் 13.5 டன் எடையும், 12 சக்கரம் கொண்ட லாரிகள் 41 டன் எடை மட்டுமே ஏற்ற வேண்டுமென மோட்டார் வாகன விதிகள் உள்ள நிலையில், அதைவிட கூடுதலாக ஏற்றப்படும் டிரெய்லர்களை துறைமுகத்தில் அனுமதிக்கின்றனர் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. பல இடங்களில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் இன்னலுக்கு ஆளாவதால், எடை ஏற்றுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அவர் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர், கண்டெய்னர் பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவருக்கு உத்தரவிட்டார். அந்த கூட்டத்தில் அதிக பாரம் ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகளை கண்காணிக்கவும், சம்மந்தப்பட்ட லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் எனவும், அந்த குழு அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறைகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 27- ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here