காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது;

0
316

நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டியில் காய்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த காய்கறிகளை அகற்றிய போது, அங்கு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் லாரியில் இருந்த 2 பேரை பிடித்து, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 42), காராமணிக்குப்பத்தை சேர்ந்த முகமது ஷெரீப்(26) என்பதும், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும், போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக காய்கறி மூட்டைகளுக்கு இடையே புகையிலை பொருட்களை வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத், அக்பர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள், புகையிலை பொருட்களை ஆய்வு செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமார், முகமது ஷெரீப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்துல் ரஷீத், அக்பர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here