சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெறவுள்ளது என்ற சூழலில், அந்தப் பொறுப்பிற்குப் போட்டியிடும் வழக்கறிஞர் திரு ஆர் கிருஷ்ணகுமார் நேற்று (14.12.2022) மாலை சுமார் 4:30 மணியளவில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது, நூற்றுக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனுவை மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (IAL) தமிழ்நாடு மாநில துணை தலைவருமான தோழர் க தேசிங் முன்மொழிந்தார். மூத்த வழக்கறிஞர்கள் திரு தாமோதரன், திருமிகு பியூலா ஜான் செல்வராஜ், (MHAA) நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர் பொறுப்பிற்குப் போட்டியிடும் திரு ஆதிமூலம், IAL அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான திரு ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.
முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் திரு மில்டன், திரு பாரதி, திருமிகு தாரா ஆகியோர் மூத்த வழக்கறிஞர் க தேசிங் மற்றும் ஆர் கிருஷ்ணகுமார் ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பரஸ்பரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள். வேட்பாளர் ஆர். கிருஷ்ணகுமார் சங்கத் தேர்தலில் வெற்றியடைய ISCUF அமைப்பின் மாநில செயலாளர் திரு செந்தில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.













