கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய, ரயில்வே பாதுகாப்பு படையினர், 49 பேருக்கு, சென்னை சென்ட்ரலில் நேற்று, வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., பிரேந்திரகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 49 பேருக்கும் பழக்கூடைகள், மரக்கன்றுகள், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தொற்றில் இருந்து மீண்டு, நோயாளிகளுக்கு, ‘பிளாஸ்மா’ கொடுத்த, ஒன்பது ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியின் முடிவில், நிருபர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., அருள்ஜோதி கூறியதாவது:
தெற்கு ரயில்வே, பாதுகாப்பு படையில், 128 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருச்சியில் ஒருவர் இறந்தார். மற்ற அனைவரும் குணமடைந்தனர். இறந்தவருக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து மீண்ட, 38 பேர், பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, விரைவில் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய பாதுகாப்பு வழங்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். புறநகர் ரயில் போக்குவரத்து துவங்குவது குறித்து, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளின் ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, அதிகாரி கூறினார்.














