இவரைப் போல் வந்துவிட மாட்டோமா என்று இன்றளவும் ஏங்கித் தவிக்கும் சினிமா நட்சத்திரங்கள் ஏராளம் ஏராளம்.
நகைச்சுவையின் அடையாளமாய் பார்க்கப்பட்டாலும் சோகம், துக்கம், வறுமை, பசி… இப்படி எது கேட்டாலும் அபரிமிதமாய் வாழ்க்கையில் அனுபவித்தவர் இவர்.
உலகத்தை தன் நடிப்பால் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல் சத்தமேயில்லாமல் உலகளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய அந்த கலைஞன் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்.
சாப்ளின் உதிர்த்த வார்த்தைகளை வாழ்ந்து பார்த்தாலே வாழ்க்கையில் வெற்றியை எளிதில் தொட்டுவிடலாம். நீங்கள் எதை கனவு காண்கிறீர்களோ, அதுவாகவே மாறுவீர்கள் என்ற வாசகத்திற்கான உதாரணப் புருஷர்தான் சாப்ளின்.
தந்தை குடும்பத்தை கைவிடவே, தன் தாய் மேடையில் தோன்றி பாட்டுப் பாடி சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றிவந்தாள். ஒரு நாள் ஒரு மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்சினை ஏற்படவே, நிகழ்ச்சி பாதியிலே நின்றுவிட்டது. பார்வையாளர்களின் எதிர்ப்பு கோஷம் கிளம்பவே மேடையேறினார் பாலகன் சாப்ளின். தன்னுடைய மழலைக் குரலில் தன் தாய் கற்றுக்கொடுத்த பாடலை அச்சரம் பிசகாமல் நடனமாடியபடி பாடவே, கூட்டத்தினரிடமிருந்து காசுக்கள் மேடைக்குப் பறந்தன.
காசுகளை பொறுக்க சாப்ளின் குனிந்தபோது, விடாமல் பாடச்சொல்லி கூட்டத்தினர் வலியுறுத்தினர். சற்றும் பதற்றமடையாத சாப்ளின், ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் என்னால் பார்க்க முடியாது. சில்லரைகளை முதலில் பொறுக்கிக் கொள்கிறேன் அதற்குப் பிறகு உங்களை மகிழ்விக்கிறேன் என்று சொன்னபோது சாப்ளினின் வயது 6.
வறுமையின் பிடியிலும், சளைக்காமல் பல்வேறு வேலைகளைச் செய்து சார்லினை படிக்க வைத்தார் அவர் அம்மா. அவர் தங்கி படித்த பள்ளியில் பல்வேறு சங்கடங்களை அனுபவித்ததாக பின்னாளில் சாப்ளினே எழுதியிருக்கிறார்.
அந்த பள்ளிதான் என்னை சிறந்த நடிகனாக உருவாக்கியது என்றும் அவர் கூறியிருக்கிறார். பள்ளி நாட்களில் ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து, துவண்டு போயிருந்த நாட்களில் எல்லாம் உலகத்தின் மாபெரும் கலைஞன் நான் என்பதை மட்டும் விடாமல் மனதிற்குள் உச்சரித்துக் கொள்வேன். என்னுடைய அந்தக் கனவுதான் பின்னாளில் என்னை இவ்வளவு பெரிய நடிகனாக்கியது.
பள்ளியின் நாடக குழு மூலமாக முதன் முதலாக அமெரிக்கா போயிருந்தார் சாப்ளின். அங்கு அமெரிக்க சுதந்திர தேவி சிலையைப் பார்த்த சாப்ளின், “ஏய் அமெரிக்காவே… பத்திரமாக இரு, இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான், வந்துகொண்டிருக்கிறான்…” என்று சத்தமாகச் சொன்னார்.
அந்தச் சிறுவன் உதிர்த்த வார்த்தைகள் ஐந்து ஆண்டுகளிலேயே பலித்தது. அமெரிக்கா முழுவதும் சாப்ளினின் நடிப்பை கொண்டாடினார்கள். அமெரிக்க திரைப்பட வரலாற்றில் 1 மில்லியன் டாலர் சம்பளம் பெற்ற முதல் நடிகர் சாப்ளின் தான்.
இரண்டு ஆஸ்கார் விருதுகள், சர் பட்டம் என்று அவர் திறமைக்கு கிடைத்த விருதுகள் ஏராளம்.
உன் குறிக்கோளை மட்டும் முன்னிறுத்தி பயணிக்கும்போது புகழும், செல்வாக்கும் தானாய் வரும். அந்த வாசகத்திற்கு சரியான உதாரணமாய் இருந்தவர் சாப்ளின்.
பேசும் படங்கள் உலகை முற்றுகையிடுவதற்கு முன்பாக, திரையுலத்தை உலகளவில் கட்டிப்போட்டவர் சார்லி சாப்ளின். தொழில் நுட்பம் வளர்ந்தபிறகு, பேசும் திரைப்படம் அளவிற்கு வந்தபிறகும், சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் பேசா மொழி திரைப்படங்களாகவே வெளிவந்தது. ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் பேசும் சப்தம் கேட்கும்படி அமைத்திருந்தாலும், தான் பேசாமலேயே தன் நடிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட சாதனைக் கலைஞன் சாப்ளின்.
நீங்கள் பேச்சினால், சப்தத்தினால் சொல்ல வரும் விஷயத்தை நடிப்பினால் ரசிகர்களுக்கு உணர வைத்துவிடுவேன் என்று சவால்விட்டு அதில் வென்று காட்டிய சாதனை நாயகன்.
சில பேச்சுக்கள் மூலமாக… சில எழுத்துக்கள் மூலம் வரலாற்றில் புரட்சிகள் வெடித்த கதைகளை நாம் படித்திருப்போம். ஆனால், தன் உடல் அசைவுகள் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் புரட்சியை வெடிக்கச் செய்ய முடியும் என்று ஹிட்லரையே உணரச் செய்தவர் சாப்ளின்.
சிலரின் வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கையை கற்றுத்தரும்
சிலரின் வாழ்க்கை மட்டும்தான் வெற்றியை போதிக்கும்
சிலரின் வாழ்க்கை மட்டும்தான் உத்வேகத்தை ஏற்படுத்தும்
சிலரின் வாழ்க்கை மட்டும்தான் கண்ணீரை வரவழைக்கும்
சிலரின் வாழ்க்கை மட்டும்தான் மகிழ்ச்சி நிறைந்ததாய் இருக்கும்
சிலரின் வாழ்க்கை மட்டுமே வரலாறாகும்
சிலரின் வாழ்க்கை மட்டுமே உலக மக்களால் கொண்டாடப்படும்…
ஆனால் இத்தனையும் நிறைந்த சாப்ளின் வரலாறு உண்மையில் பொக்கிஷம்தான்.
“நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், அப்பொழுதுதான் நான் அழுவது இந்த உலகுக்கு தெரியாது” என்று சொன்ன சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளினின் பிறந்த தினம் – ஏப்ரல் 16.














