நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் – ஜனவரி 23

0
275

வாழ்க்கைப் பயணத்தில் நாம் செலுத்தும் பங்களிப்புத்தான், அந்தப் பயணத்தின் வெற்றியையும், தோல்வியையும், அர்த்தங்களையும் உறுதி செய்கிறது.
வரலாற்றில் இடம்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கையை முழுமையாக படித்துப் பார்த்து அதனுடைய உள் அர்த்தங்களை நீங்கள் ஆழ்ந்து பார்த்திர்களேயன்றால் ஒரு உண்மை புரிய வரும்.
வெற்றியாளர்கள் தங்கள் பயணத்தில் எடுத்துக்கொண்ட குறிக்கோளை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் எந்தளவிற்கு வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தார்களோ, அதே அளவிற்கு குறிக்கோளை பூர்த்தி செய்யாதவர்களும் பிடித்திருந்தார்கள். இந்த இடம் உங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தாலும் இது மிகப்பெரும் உண்மை.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியின் எழுத்துகள் அனைத்தும் நரம்புகளை துடிக்கச் செய்யும் வரிகளாகவே அமைந்திருக்கும். தன் எழுத்துகள் இந்திய சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கண்டும் என்று எண்ணிய அதே நேரத்தில் சுதந்திரமே தன்னுடைய குறிக்கோளாகவும் கொண்டிருந்தார் பாரதி. ஆனால் சுதந்திரத்தை அவர் அனுபவிக்க முடியவில்லை. ஆனால், வாழ்க்கை எனும் பயணத்தில் சுதந்திரத்திற்கான தனது பங்களிப்பை முழுமையாக அவர் விதைத்துச் சென்றார். அந்த விதையின் வீரியம்தான் இன்றும் அவரைப் பற்றி நாம் அனைவரும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
அத்தகைய எண்ணம் நிறைந்தவர்தான் இவரும். அஹிம்சை வழியே சுதந்திரத்திற்கான ஒரே தீர்வு என்று அஹிம்சையையே ஆயுதமாகக் கொண்டு களம் இறங்கிய மகாத்மா காந்தியின் வழியை முற்றிலும் நிராகரித்து, உங்கள் ரத்தத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை நான் பெற்றுத்தருகிறேன். அதிகாரத்துடன் இணங்கிப்போவதும் அடிமையாக இருப்பதும் மனித மனத்தின் சாபக்கேடு. எத்தனை தியாகங்கள் செய்வதாக இருந்தாலும், அதர்மத்தை எதிர்த்துப் போர் புரிவது ஒன்றுதான் ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும்! என்று முழங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பின்னால் நின்ற இளைஞர்களின் எண்ணிக்கை காந்தியின் பின்னால் நின்ற இளைஞர்களைவிட மிக அதிகம்.
அது 1939ம் ஆண்டு. சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து மகாத்மா காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
தன்னை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் மண்டியிட்டு சுதந்திரம் பெறும் செயலை ஒருகாலும் சம்மதிக்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததோடு, இந்திய இளைஞர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதலையும் நடத்தினார்.
எவ்வளவு இன்னல்கள் தன்னை எதிர் நோக்கியிருந்தபோதிலும், தன்னுடைய லட்சிய பயணத்தில் சிறிதளவும் தடம் மாறவில்லை சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் சுதந்திரமே தன் வாழ் நாள் லட்சியமாக கொண்டிருந்த சுபாஷின் லட்சியக் கனவுகளை அவர் முழுமையாக எதிர்கொள்ளாமல் போனாலும், அதற்காக அவர் கொடுத்த தன்னலமற்ற உழைப்புதான் இன்றும் அவரை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
பயணத்தில் குறிக்கோளை முழுமையாக சென்றடைவது வேண்டுமானால் நம் கையில் இல்லாமல் போகலாம். ஆனால், குறிக்கோளை அடைவதற்கான முயற்சி தன்னலமற்றதாக இருந்தால் எவரும் வரலாற்றில் இடம்பெற முடியும் என்பதே சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்.
பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது! என்று சொன்ன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் – ஜனவரி 23.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here