தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

0
314

இது ஒன்று மட்டும் நிகழவில்லையென்றால் இன்றும் மனித இனம் இலை தழைகளைத்தான் கட்டிக்கொண்டுதான் இருந்திருக்கும். இந்த ஒரு மாற்றம் மட்டும் நிகழ்ந்திருக்கவில்லையென்றால், தகவல் பரிமாற்றம் புறாவின் மூலம்தான் நிகழ்ந்திருக்கும்.
இந்த புரட்சி மற்றும் நிகழ்ந்திருக்கவில்லையென்றால், இன்றும் பல்வேறு இடங்களுக்கு நடைபாதையாகத்தான் கடந்திருப்போம். ஆனால், என்று அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி மனித சமூகம் நகர ஆரம்பித்ததோ, அன்று முதல் அறிவியல் படிப்படியாக வளர ஆரம்பித்தது. இன்று அறிவியல் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்று சொல்லும் அளவிற்கு அறிவியலோடு அறிவியலாக நாம் ஒன்றிணைந்துவிட்டோம்.
காலையில் கண் விழித்து பல் துலக்குவது ஆரம்பித்து, இரவில் படுக்கைக்கு செல்லும்வரை அறிவியல் இல்லாமல் நம் இயக்கம் என்பது சாத்தியமில்லா ஒன்றாக மட்டுமே இருக்கும்.
அறிவியல் என்ற ஒரு விஷயம் இல்லையென்றால், மக்கள் எந்தளவிற்கு அவஸ்தைப்படுவார்கள் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரம் சந்தித்தது. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்தது. இயற்கை சீற்றத்தின் காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துவிட மின்சாரம், தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதிகள் எல்லாம் துண்டித்துப்போக மனிதர்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. அறிவியலின் மகத்துவத்தை முழுமையாக மனிதர்கள் புரிந்துகொண்ட சமயம் அது.
அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பணி செய்வதற்காக கடல் கடந்து செல்பவர்கள், தங்களின் சொந்தங்கள், தங்கள் குழந்தைகளிடமும் பேசுவதற்கே முடியாமல் இருந்த காலகட்டமெல்லாம் மலையேறி, இன்று நினைத்த நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்கள், தங்கள் குழந்தைகளின் முகம் பார்த்து பேசும் அற்புதத்தை வழங்கியது அறிவியல் தானே.
இன்று அறிவியல் ஆராய்ச்சிகள் மனிதனின் மனதை பண்படுத்தியிருக்கிறது. அறிவை தெளிவுபடுத்தியிருக்கிறது. ரத்தம் கொடுத்தால் அவ்வளவுதான், உடல் பலம் குறைந்துபோகும், பலவீனமாகிவிடும் என்ற சித்தாந்தங்களையெல்லாம் உடைத்து தூள் தூளாக்கியதெல்லாம் அறிவியல் வளர்ச்சி தந்த தெளிவினால்தானே.
பேரிடர் காலத்தின்போது பேராபத்தில் இருந்த பல உயிர்களை காப்பாற்ற உறுதுணையாக இருந்து, உதவி செய்யும் நபர்களையெல்லாம் அடையாளம் கண்டு, அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்தது ஆரம்பித்து, இன்று காணாமல் போனவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் ஒரு சில நாட்களிலேயே கண்டுபிடிக்க முடியுமளவிற்கு வாய்ப்பு தந்ததும், இன்று பள்ளியில் நம் குழந்தைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் உடனுக்குடன் மொபைல் ஃபோன் வழியாக எல்லாம் தெரிந்துகொள்வது வரை இப்படி எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமாய் விளங்குவது அறிவியல் வளர்ச்சிதானே.
அறிவியல் வளர்ச்சி நம் தேசத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளுடன், பெற்றோர்களுடன், அண்டை அயலாருடன் மனம் விட்டு பேச விடாமல் நம்மை கட்டிப்போட்டிருப்பதும் அறிவியலின் வளர்ச்சியின் ஒரு பகுதிதானே. மனிதர்களிடம் நேரிடையாக பழகும் போக்கும், நேரிடையாக நலம் விசாரிக்கும் பண்பும் இன்றைய வளர்ச்சியடைந்த அறிவியல் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
அறிவியலால் நாம் கண்ட ஆதாயம் மலையளவு என்றால், அதனால் நாம் அடைந்த துயரம் கடுகளவேணும் இல்லாமல் இல்லை. மலையளவு ஆதாயத்தை எண்ணி மகிழ்வோம் அறிவியலை கொண்டாடுவோம். அதே நேரத்தில் எத்தனை தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதர்களிடம் மனம் விட்டு பழகும் நம் கலாசாரத்தையும், மனித நேய பண்பை மட்டும் எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காமலிருக்க பழகிக்கொள்வோம்.
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here