சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் பணியில்,சென்னை மாநகராட்சி ;

0
248

போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பிரமாண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால், பல விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும், சட்ட விரோதமாகவும், சாலையில் பிரமாண்டமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது குறித்து படங்களுடன் நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதைதொடர்ந்து, விளம்பர பலகைகளை முழுமையாக அகற்றும் நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி அதிரடியாக களம் இறங்கி உள்ளது. அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், விளம்பர பலகைகளை அகற்றும்படி கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில், 1 முதல் 15 வரை மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், தட்டிகள், சுவரொட்டிகளை உடனடியாக கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் விதிமுறைகளின்படி தண்ட தொகையோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோ நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தை அறிக்கையாக, மாநகர வருவாய் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவை தொடர்ந்து, பெருங்குடி மண்டலத்தில், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் பேனர் அகற்றப்பட்டது
அடையாறு மண்டலத்தில், 37 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அண்ணா நகர் மண்டலத்தில், 18 இடங்களில் விளம்பர பலகைகள் அடையாளம் காணப்பட்டு, ஏழு இடங்களில் நேற்று அகற்றப்பட்டுள்ளன.அதேவேளையில், கோடம்பாக்கம், வளசரவாக்கம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களில், சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்படவில்லை.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், இந்தாண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத பேனர்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே, பல்வேறு இடங்களில் இருந்த பேனர்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். பல இடங்களில், மிக பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை, அவற்றின் உரிமையாளர்களே அகற்ற, குறிப்பிட்ட கால அவகாசம் அளித்துள்ளனர். குறித்த காலத்துக்குள் கட்டுமானத்துடன் அகற்றவிட்டால், அவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத விளம்பர பலகைகள் குறித்து, 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தாம்பரம் ஆவடியில் எப்போது?சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், தாம்பரம், ஆவடி மாநகராட்சி மற்றும் அதை ஒட்டிய ஊரக பகுதிகளில் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் தொடர்கிறது. பல்லாவரம் — துரைப்பாக்கம் ரேடியல் சாலை, தாம்பரம் — வேளச்சேரி சாலை, தாம்பரம் — முடிச்சூர் சாலை, வானகரம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில், பிரதான கட்சிகளுடன், தனியார் நிறுவனங்களும், விதிகளை மீறி சாலைகளை மறித்து, பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இச்சாலைகளில், பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்கள் கிழிந்தும், அறுந்தும் காணப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
ஜி.எஸ்.டி., சாலையில், மேற்கு தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்புற கூறை முழுதும், தனியார் நிறுவனங்களின் பேனர்கள் அத்துமீறி வைக்கப்பட்டுள்ளன. இதேநிலை தான், பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சிகளிலும் உள்ளது. அங்குள்ள, சில ஊராட்சி நிர்வாகங்களும், பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றன. சென்னை மாநகராட்சியை போல், தாம்பரம், ஆவடி மாநகராட்சி, அருகாமையில் உள்ள ஊராட்சிகளிலும் சட்ட விரோத விளம்பர பலகைகள் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here