இந்த பூமியில் பிறப்பெடுத்த எல்லோருக்கும் பெரிதாக சாதிக்க வேண்டும், தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டும் இதெல்லாம்தான் ஆசையாக இருக்கும். ஆனால், எல்லோராலும் இந்த ஆசையை நிறைவேற்றிவிட முடிகிறதா? ஒருவருக்கு சாத்தியப்படுத்தப்படும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு சாத்தியப்படுத்தப்படாமல் போவதற்கான காரணங்கள்தான் என்ன?
வார்த்தைகளில் இருக்கும் உறுதியும், நம்பிக்கையும், உள்ளுணர்வில் இல்லாமல் போவதாலேயே நாம் பேசும் வார்த்தைகள் வெற்று உறுதிமொழிகளாகவே இங்கு வலம் வருகிறது. எப்போது நாம் உதிர்க்கும் வார்த்தையும், எண்ணங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதோ, அப்போது நாம் சொன்ன வார்த்தைகள் நிதர்சனமாகும். நாம் உதிர்க்கும் வார்த்தைகள் சத்தியமாகும்.
உள்ளும் வெளியேயும் மட்டுமல்லாமல் உடலில் எல்லா செல்களிலும் சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் கணிதம் என்ற ஒன்று முழுமையாக நிரம்பியிருந்ததால்தான் ஸ்ரீநிவாச ராமானுஜம் என்ற கணிதமேதையை இன்றும் உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
கணிதத்தைத் தவிர மற்றப் பாடங்களில் பெரிதாக அவரால் பிரகாசிக்கவில்லையென்றாலும், அதற்காக ஒருபோதும் அவர்க் துவண்டுவிடவில்லை. தனக்கு என்ன வருமோ அதில் மட்டுமே அவர் கவனத்தை முழுமையாக செலுத்தினார். அதை மட்டுமே முழுமையாக நம்பினார். எதில் உங்களுடைய நேரம் அதிகம் முதலீடு செய்யப்படுகிறதோ அது வளரும். அதுதான் ராமானுஜம் வாழ்க்கையிலும் நடந்தது. தான் வாழ்ந்த 32 வயது வரை தன் வாழ் நாளில் பெரும்பகுதியை கணிதத்தில் புதிய தேற்றங்களையும், சமன்பாடுகளையும் கண்டுபிடிப்பிலேயே செலவு செய்தார்.
ராமானுஜன் குழந்தைப் பருவத்தில் இருந்த காலகட்டம் அது. அன்று மாலை பள்ளியிலிருந்து ராமானுஜன் வீடு திரும்பவில்லை. கவலையில் கண்ணீர் விழிகளுடன் அவரின் தாய் கோமளத்தம்மாள் ராமானுஜனைத் தேட ஆர்மபித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அந்தச் சமயம் ராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, ‘ராமானுஜனை காணவில்லை…’ எனக் கூறி தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்துவிட்டு, அனந்தராமனும், அவரது தாயாரும் ஆளுக்கொரு பக்கமாக ராமானுஜனைத் தேடத் தொடங்கினர்.
அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான், எங்கும் ராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக்கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக்கொண்டு ராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன. அனந்தராமன் அவரைத் தட்டி எழுப்பவும், திடுக்கிட்டு எழுந்த ராமானுஜம் ‘என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே’ என்றவர், இரு கனவில் நான் போட்ட கணக்கை முழுமைப்படுத்திவிட்டு வருகிறேன் என்று கூறு நோட்டில் கணக்கை முழுமையாக முடித்துவிட்டு புறப்பட்டார்.
எந்த நேரத்திலும் அவருடைய சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் கணிதம் மட்டுமே நிறைந்திருந்தது என்பதை உணர்த்தும் நிகழ்வுதான் மேலே சொன்னது. அவரின் அந்த அர்ப்பணிப்புதான் இன்றும் அவரைப் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
கணிதம் என்ற ஒன்றைக்கொண்டு உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கணித மேதை ஸ்ரீ நிவாச ராமானுஜம் நினைவு தினம் ஏப்ரல் 26.













