காசிமேடு மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை திருடப்பட்ட வழக்கில் கொலையாளி கைது
சென்னை காசிமேடு காசிமா நகர் 1 ஆவது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் நாயகம். இவருடைய மனைவி அந்தோணி மேரி(60). மைக்கேல் நாயகம் மீனவர் ஆவார். இவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் வீட்டில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்தோணி மேரியின் மகள் சுபா கொடுத்த புகாரின்பேரில் காசிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது மாடியில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்தோணி மேரியின் தோழியின் மகனும், மைக்கேல் நாயகத்துடன் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் காசிதோட்டம் 1 வது தெருவை சேர்ந்த சகாயம் அலெக்ஸ்(42) என்பவரை சந்தேகத்தில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் அந்தோணி மேரியை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார். மேலும் அவர் விசாரணையில் கூறியதாவது, சகாயம் அலெக்ஸ்க்கும் அவருடைய மனைவிக்கும் பணத்தேவைக்காக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், பணத்தேவையை நிறைவேற்ற திருடலாம் என சகாயம் அலெக்ஸ் திட்டமிட்டதாகவும், சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் தனது தாயாரின் தோழியும், தான் உடன் வேலை செய்யும் மைக்கல் நாயகம் வீட்டில் இல்லாதபோது அவருடைய வீட்டிற்கு சென்று அங்கிருந்த அந்தோணி மேரியை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க அந்தோணிமேரி உடல் மீது மிளகாய் பொடிகளை தூவிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டதாகவும், பின்னர் ராயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் திருடிய நகையை ரூ.130000 க்கு அடகு வைத்துவிட்டு அதில் ரூ.40 ஆயிரத்தை மனைவிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கையில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உடனடியாக அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சகாயம் அலெக்ஸை கைது செய்து கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வேறு ஏதேனும் இடத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















