கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் இன்று மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை கேட்டறிந்தார். இன்றைய ஆலோசனைக்கு பிறகு லாக்டவுன் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 1.70 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. ஒரு கோடி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்றாலும் தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூலை 31ஆம் தேதி வரை ஆறாம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் 7 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 2 வரை லாக்டவுன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிச்சாமி.
இன்றைய தினம் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், எந்த மாவட்டத்தில் அதிகம் உள்ளது அங்கு மட்டும் லாக்டவுனை தீவிரப்படுத்தலாமா என்றும் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையின் பேரில் முதல்வர் பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. லாக்டவுன் 6.0 வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிகிறது. மத்திய அரசு மூன்றாம் கட்ட லாக்டவுன் தளர்வுகளை அறிவித்துள்ளது.
தற்போது பொது போக்குவரத்துக்கு வரும் 31ஆம் தேதி வரை தடை உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும் மாவட்டங்களிலும், கிராமங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ குழுவினருடன் நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா அல்லது தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகள் இருக்குமா என்று தெரியவரும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருக்காது என்றாலும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.















