தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன,
மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்த சிலர் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட தினத்தன்று கேரள மாநிலம் மலப்புரத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுச் சீட்டுகளை வழங்கியதாகவும், பயிற்சி வகுப்புகளை நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த கேரளா-எடக்கரை மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் 20 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட் அமைப்பே சேர்ந்தவர்களின் இடங்களாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல கேரளாவில் 3 இடங்களிலும் கர்நாடகாவில் 5 இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
இன்று நடந்த இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள், புத்தகங்கள், அறிக்கைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.













