வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்புதானே. அந்த அனுபவங்களின் தொகுப்புகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். ஆனால், 1900 – 80களின் பிறந்தவர்களில் அனுபவங்களில் இந்த சாதனத்தின் அனுபவங்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.
தொழில் நுட்ப வசதிகள் பெருகிப்போன இந்த சமூகத்தில் தொலைக்காட்சி, மொபைல் ஃபோன், ஃபேஸ்புக், வாட்ஸப், ஸ்கைப் போன்ற பல்வேறு ஊடகங்களின் மூலம் நாம் பெறும் அனுபவங்கள் அனைத்தும் நம் மூளையில் நம்மையுமறியாமல் நினைவுப் பதிவுகளாக பத்திரப்படுத்தப்படுகின்றன. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் கொட்டிக்கிடக்கும் இந்தச் சூழலில் நாம் பெற்ற அனுபவங்களையெல்லாம் விட, தொழில் நுட்ப வசதிகள் பெரிதாக எட்டிப்பார்த்திராத 1960 கால கட்டங்களில் மனிதர்கள் சேகரித்த அனுபவங்கள் என்றும் இனிமையானது.
40 கி.மீ. தொலைவுள்ள ஒரு இடத்தை பேரூந்தில் கடக்கும் அனுபவத்தை விட, பேரூந்து வசதியே இல்லாத காலத்தில் நடைபயணம் மட்டுமே மேற்கொண்ட மக்களின் அனுபவம் உண்மையில் மிக அலாதியானது. நடந்து செல்லும் அந்த சூழலில் பல்வேறு மனிதர்களிடத்தில் பேசும், பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கும், ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளியிலும் வெவ்வேறு வகையான சூழலையும், இயற்கையையும் மக்கள் ரசித்திருப்பார்கள். இதெல்லாம் அனுபவம்தானே. இந்த அனுபவங்கள் பேருந்து மூலம் நமக்கு கிடைத்திருக்குமா என்று கேட்டால் நிச்சயம் ஏமாற்றம்தான். குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் எளிதாக கடந்து வர இன்றைய தொழில் நுட்பம் பெரிதும் நமக்கு உதவுகின்றன. ஆனால், நாம் சேகரிக்கும் அனுபவங்களை இந்த நவீன தொழில் நுட்பம் நமக்கு பெற்றுத்தருமா என்று கேட்டால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
அந்த வரிசையில் வானொலி பெட்டி என்ற அனுபவம், இந்த தலைமுறையினர் பெரிதும் கொண்டாடக்கூடிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சென்ற தலைமுறை மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வானொலி என்பது நிச்சயம் ஒரு அனுபவ பொக்கிஷம்தான்.
இன்றும் நாம் கேட்கும் ஏதோ ஒரு திரையிசை பாடல் அன்றைய காலகட்டத்தில் வானொலியில் கேட்ட நினைவுகள் நம் கண் முன்னே வந்து போகச்செய்யும். அக்காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள், சம்பாஷனைகள், செல்லச் சண்டைகள், நாம் மேற்கொண்டிருந்த பயணங்கள்… இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகளை ஓடச் செய்யும்.
”பரீட்சைக்கு படிக்க வேண்டிய நேரத்துல… பொழுதடைய அந்த ரேடியோவையே கட்டிக் கிடந்து அழறியே… அந்த ரேடியோவா உனக்கு வந்து கஞ்சி ஊத்தப்போகுது…” என்ற அம்மாவின் அதட்டல் ஒலி இப்போதும் நினைவுகளில் எங்கோ ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
அரைமுள வானொலிதான், அப்போதைய கையடக்க ‘டிரான்சிஸ்டர்’. அதை காதின் ஓரமாக வைத்துக்கொண்டு கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதும், நம்மைச் சுற்றி, நாம் சொல்லும் கிரிக்கெட் ஸ்கோரை கேட்பதற்கு ஆர்வமாய் தவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் கூட்டமும் இந்த தலைமுறையினர் தவரவிட்ட மாபெரும் அனுபவம்.
வெள்ளிக்கிழமை ஒருமணி நேரம் ஒலிபரப்பாகும் அந்த நாடகத்தை கேட்பதற்காகவே, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்து முடிக்கும் அம்மா, மின்சாரம் இல்லாத வீடுகளில், டீ குடிக்கும் காசை சிறுக சிறுக சேர்த்து வைத்து, அந்தப் பணத்தில் ரேடியோ பெட்டியில் பயன்படுத்துவதற்கான பேட்டரி வாங்கிவந்து ’சர்ப்ரைஸ்’சாக வெளியே காட்டும் அப்பா. அதைப் பார்த்து ’எங்க அப்பாவைப்போல இந்த உலகத்தில் யாரும் கிடையாது’ என்று குதூகலப்படும் குழந்தைகள்… இன்னும் எத்தனை எத்தனை அனுபவங்களை நம்முள் விதைத்துச் சென்றிருக்கிறது இந்த வானொலி. பொழுதுபோக்கிற்கான கருவியாக பார்க்கப்பட்டாலும், இன்றும் நம் கடந்தகால நினைவுகளை மீள்பார்வை செய்துபார்க்கச்செய்யும் அந்த அற்புத கருவியை ஒருமுறை சிந்தனை செய்வோம்.
பிப்ரவரி 13 – சர்வதேச வானொலி தினம்.













