மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்;

0
300

கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் 107 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு, மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம்ஆண்டு அனைத்து கடைகளுக்கும் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டது.
இதனால் பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை மொத்தம் ரூ.10 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் 3 செல்போன் கடைகள் உள்பட 7 கடைகளின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதாவது 7 கடைகளின் உரிமையாளர்களும் சுமார் ரூ.4½ லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் விடுத்தும், அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

இந்த நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். ஒரே நேரத்தில் 7 கடைகளுக்கு அடுத்தடுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.