திருப்பூர் – அணைக்காடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்து வரும் இடம் முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இதனால் அவர் கோர்ட்டை நாடினார். வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அந்த இடம் முத்துச்சாமிக்கு சொந்தமானது என்றும், பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு நிலத்தை அளவீடு செய்து தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அளவீடு செய்ய வருவாய்துறையினர் செல்லும் போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அவ்வப் போது அளவீட்டு பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.
இந்தநிலையில் அணைக் காடு பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய இன்று வருவாய்துறையினர் சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் கூறுகையில்:-
ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் எங்களை குடி வைத்தார்கள்.தற்போது முத்துச்சாமி என்ற நபர் போலி பத்திரங்களை தயார் செய்து கோர்ட்டில் தவறான தகவல்களை கூறி உத்தரவு வாங்கியுள்ளார்.
40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் எங்களுக்கு அந்த இடத்தை வருவாய்துறையினர் எழுத்துபூர்வமாக எழுதி தந்துள்ளதாகவும், ஆனால் அதை கோர்ட்டில் சமர்பிக்காமல் விட்டு விட்டனர் .
தற்போது எங்கள் தரப்பிலும் கோர்ட்டை அணுக உள்ளோம். அதுவரை நிலத்தை அளவீடு செய்ய கூடாது. குடியிருப்புகளை அகற்றவும் கூடாது என்று கோரிக்கை வைத்தார். முன்னதாக சாலை மறியலின் போது போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
















