திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான பேருந்து சேவை : மீனவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி;

0
375

திருவொற்றியூர் முதல் கோவளம் வரை

100 மீனவ கிராமங்களை இணைக்கும் வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

காசிமேட்டில் மலர்தூவி, பூங்கொத்து கொடுத்து பேருந்தை வரவேற்ற மீனவர்கள்

வடசென்னை பகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையார், திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காக அரசு பேருந்து, மின்சார ரயில் என பயணித்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் பாரிமுனை சென்று அங்கிருந்து பேருந்து மூலமாகவோ, ரயில் மூலமாகவோ செல்கின்றனர். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தினரும் போக்குவரத்திற்கு இரண்டு மூன்று வாகனங்கள் மாறி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வடசென்னை பகுதியில் பணிக்காக அடையார், திருவான்மியூர் செல்பவர்களும், திருவொற்றியூர் முதல் கோவளம் வரை உள்ள 100 மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான புதிய வழித்தடத்தில் வழித்தட எண் 109டி என்ற எண்ணில் அரசு பேருந்து இயக்கப்பட உள்ளது.

திருவொற்றியூரில் இருந்து புறப்படும் பேருந்து சுங்கசாவடி, ராயபுரம், பாரிமுனை, தலைமைசெயலகம், கண்ணகி சிலை, நொச்சிகுப்பம், பட்டினபாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், விஜிபி ஆகிய பகுதிகள் வழியாக கோவளத்தை சென்றடையும். இந்த வழித்தடத்தில் இரு வழிகளிலும் 2 பேருந்துகள் தினமும் 4 முறை இயக்கப்படும்.

சாதாரணமாக திருவொற்றியூரில் இருந்து கோவளம் செல்ல வேண்டுமானால் திருவொற்றியூரில் இருந்து பாரிமுனைக்கு ரூ.23 மற்றும் பாரிமுனையில் இருந்து கோவளத்திற்கு ரூ.37 என மொத்தம் ரூ.60 வரை பேருந்திற்கு செலவாகும். ஆனால் இப்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் ரூ.47 கட்டணத்தில் திருவொற்றியூரிலிருந்து கோவளம் சென்றுவிடலாம்.

இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி திருவொற்றியூர் புதிய பேருந்து பணிமனையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், ராயபுரம் மூர்த்தி, எபினேசர், ஆகியோர் கலந்து கொண்டு இந்த புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட பேருந்து காசிமேடு பகுதிக்குள் நுழைந்தபோது அங்கு திரளாக கூடியிருந்த மீனவர்கள் பேருந்தை மலர்தூவி வரவேற்றனர். மேலும் பேருந்திற்கு தீபாரதணை காண்பித்து வரவேற்றனர். மேலும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் தேசிய செயல் தலைவர் நாஞ்சில்ரவி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

திருவொற்றியூர் முதல் கோவளம் வரை உள்ள 100 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களான எபினேசர், மூர்த்தி, கே.பி.சங்கர் ஆகியோரிடம் சங்கத்தின் சார்பில் கடந்த 23 ஆம் தேதியன்று மனு அளித்தோம். இதுகுறித்து உடனடியாக சட்டசபையில் பேசி ஒரு வாரத்திற்கு திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது மீனவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி வரையில் தினமும் இருமார்க்கமாக 40 முறை பேருந்துகள் இயக்கப்படுவதுபோல திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான இந்த பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here