பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த பரிசு தொகுப்பு வருகிற 4-ந் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பெறுவதற்காக ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப்படுவதை தடுக்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் கடை எண், கடையின் பெயர், அட்டை எண், ரேஷன்கார்டுதாரரின் பெயர், பொருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். தினமும் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், வருகிற 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













