சொத்து தகராறு காரணமாக மனைவி வெட்டிக் கொலை;

0
198

திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் விவசாயம் செய்து வந்த செந்தில்குமார் – சத்யா தம்பதியிடையே, அண்மையில் பிரிக்கப்பட்ட குடும்ப சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வந்துள்ளது. சத்யாவின் சகோதரிக்கு வழங்கப்பட்டதை விட, சத்யாவுக்கு குறைவான சொத்தே கிடைத்ததாகக் கூறி செந்தில்குமார் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது 15 வயது மகளைத் தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார், மீண்டும் மனைவியுடன் சொத்து விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், வீட்டில் இருந்த அரிவாளால் சத்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், செந்தில்குமார் தானும் விஷம் குடித்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னதாக, செந்தில்குமார் தனது நெருங்கிய உறவினர்கள் அடங்கிய வாட்ஸ்-ஆப் குழுவில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், 15 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் கதவை உடைத்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தqற்போது அந்த 15 பக்க கடிதத்தையும், வாட்ஸ்-ஆப் வீடியோவையும் கைப்பற்றியுள்ள போலீசார், இந்த கொடூர முடிவுக்குச் சொத்து தகராறு மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நிமிடம் யோசிக்காமல் எடுத்த இந்த ஆத்திர முடிவு, 15 வயது சிறுமியைத் தாய், தந்தை இருவரையும் இழக்கச் செய்து நிர்கதியாக நிற்க வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர் ஆனந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here