சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்களை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைத்து, தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று சென்னை அண்ணாசாலை பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், கார் ‘ஸ்பீக்கர்’கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் செல்போன்கள் இருந்தது.
ஆனால் அவற்றிக்குரிய எந்த ஒரு ஆவணமும் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் எனவும், இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் வடசென்னை ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி என்.ஆர். ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது














