பயங்கரவாத தாக்குதலால் உச்சகட்ட பதற்றம் நிலவும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் பாகிஸ்தான் மீது பெரும் கோபத்தில் இருக்கிறது.இதன் வெளிப்பாடாக, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதி நீரை இந்தியா தற்போது, பாகிஸ்தானுக்கு திறப்பதை நிறுத்திவிட்டது. இதற்கு பதிலாக, இந்தியாவுடனான யுத்தத்தை தணிக்கக் கூடிய சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இன்று சந்தித்து நிலைமைகளை விளக்கினர். இதேபோல அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் மத்திய அரசு நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. மத்திய அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்போம் என்றார்.













