வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் கடந்த ஆண்டில் இதே மாதம் ரூபாய் 56,310 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், நடப்பாண்டில் ரூபாய் 20,529 கோடி கூடுதலாக அதாவது ரூபாய் 76,839 கோடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பதிவுத் துறையில் கடந்த ஆண்டு 17.11.2021 அன்று ரூபாய் 7,877.52 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில் 17.11.2022 வரை ரூபாய் 2,785.65 கோடி கூடுதலாக அதாவது ரூபாய் 10,633.17 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இரண்டு துறைகளையும் சேர்த்து மொத்தம் ரூபாய் 23,314.65 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டியதை முன்னிட்டு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, முதன்மைச் செயலாளர்/வணிக வரி ஆணையர் தீரஜ்குமார், பதிவுத் துறைத் தலைவர் ம.ப. சிவன் அருள், மற்றும் வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) மா.சௌ. சங்கீதா, ஆகியோர் முதலமைச்சரை இன்று (18.11.2022) தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.














