வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி, கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200-க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக, கடலூர் தபால் நிலையம் அருகே பரபரப்பான சூழல் நிலவியது. இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர். அப்போது பாஜக தொண்டர் ஒருவர், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே இறங்க செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கபட்டதை கண்டித்து, கோவில் சன்னதி அருகே தடையை மீறி, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட, சுமார் 200 பாஜக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே, பெங்களூரு சாலையில் குவிந்த 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர், சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.














