உலக சுகாதார தினம் – ஏப்ரல் 7

0
293

உலகளவில் சுகாதாரத்தை முன் னிறுத்தி சொல்லப்படும் விஷயங் களில், கை கழுவும் முறைதான் முதன் மையானது.
தமிழில் சுத்தம் சுகம் தரும்; சுத்தம் சோறு போடும் என்று சுத்தத்தைப் பற்றி விதம் விதமாக பழமொழிகள் வைத்திருக்கிறோமே தவிர அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் நோய்கள் பெரும்பாலானவை கை கழுவாததாலேயே ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவமனமான டபிள்யூ எச் ஓ தெரிவிக்கிறது. வாந்தி பேதி, காலரா, சீதபேதி இவைகளுக்குப் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நமது நாட்டில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
இந்தி யாவில், கைகளை கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப் போக்கு நோயால் ஆண்டிற்கு, ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். இதனால் உலகளவில், 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகா தார அமைப்பு தெரிவிக்கிறது.
ஆனால் ஒரு சிறிய செயல் கை கழுவுதல். அதைச் செய்யாததானால் அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு என குழந்தைகள் அவதிப்படுகின்றனர் என்ற விழிப்புணர்வுகூட மக்களுக்கு இருப்பதில்லை.
பெற்றோர்களுக்கு சரியான வழி காட்டுதலும் ஆசிரியர்களின் கண்டிப்பான கடைப்பிடித்தல் மூலமே இதை இந்தப் பழக்கத்தை குழந்தைகளுக்கு வழக்கப்படுத்த முடியும். நம்மில் பல பெரியவர்கள் கூட கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தம் செய்வதில்லை. குறிப்பாக சோறூட்டும் தாய்மார்கள் இதைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் எங்காவது போய் வந்த பிறகும் விளையாடிய பிறகும் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக பெரியவர்களும் சிறியவர்களும் கைகளைக் கழுவுதலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் தொடங்குவது தான் பிள்ளைகளின் மனதில் பதியும். இதே பழக்கம் அவர்கள் நாளை பெரியவர்களானதும் தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
முறையாக கை கழுவுதல் மூலம் பல்வேறு நோய்களை வரவிடாமல் தடுக்கலாம். அது என்ன முறையான கை கழுவுதல்?
வெறும் நீரில் லேசாக கையைக் காட்டுதல் அல்ல கழுவுதல் என்பது. நல்ல சோப்புப் போட்டு புறங்கை, உள்ளங்கை என முழுவதும் சோப்பைப் புரட்டி பிறகு நன்றாக நீரில் கைகளைக் காட்டிக் கழுவுதலே முறையான கை கழுவுதல் ஆகும். இதற்கென சோப்புகள் விற்கின்றன. அவற்றைத்தான் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வாங்க இயலாதவர்கள் தினமும் குளிக்கும் சோப்பு அளவு குறைந்து தூரப்போடும் முன் அவற்றை சேமித்து வைத்து ஒன்றாகச் சேர்த்து அவைகளைக் கூட கைகழுவப் பயன்படுத்தலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்?
* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 சதவீதம் தடுக்கலாம்.
சின்ன செயல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சிறிய உதாரணம்தான் கை கழுவுதல் என்பது. இந்த சின்ன செயல் பெரிய அளவிலான ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பேணிக்காக்கிறது என்கிறபட்சத்தில் அதை நாமும், நம்மை பிந்தொடரும் நம் சந்ததிகளுக்கும் கற்றுக்கொடுக்கலாமே!
ஏப்ரல் 7 – உலக சுகாதார நாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here