சர்வதேச மன்னிப்பு தினம் – ஏப்ரல் 5

0
330

இந்த ஒரு சொல்லை மட்டும் ஒவ்வொருவரும் சரியாக கையாண்டால், சரியாக தன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால், இந்த சமூகமே ஆனந்தமயமானதாக மாறிவிடும்.

புராண, இதிகாச காலங்களில் ஆரம்பித்து, அடுத்த வீட்டில் நடக்கும் வன்முறை உள்பட எல்லாமே இந்த ஒற்றை சொல்லை சரியாக கையாள தெரியாததால்தான். வாழ்க்கையில் சிறந்தவனாகவும், வல்லமை பொருந்தியவர்களாவும் வாழ்வதற்கான நெறிமுறைகள் அனைத்தும் மிகமிக எளிமையானது. ஆனால், அந்த நெறிமுறைகளை கையாள்வது என்பது அந்தளவிற்கு எளிமையானதல்ல. இதுதான் வாழ்க்கையின் சூட்சுமம்.

மன்னிப்பும் அந்த வகையறாவைச் சார்ந்ததுதான். மன்னிப்பு என்ற வார்த்தையும், அதன் நெறிமுறைகளும் மிக மிக எளிமையானது. ஆனால், அதை நாம் சரியாக கையாள்கிறோமா? துரோகம் செய்த நம் தொழில் முறை நண்பரை மன்னித்து விட்டோமா, எல்லோர் முன்னிலையிலும் அவமரியாதை செய்த என் உறவினரை மன்னித்துவிட்டோமா என்பதில்தான் மன்னிப்பின் மகத்துவம் அடங்கியிருக்கிறது.
மன்னிப்பு குறித்து மஹாத்ரயா குறிப்பிடும்போது, ‘நான் மற்றவர்களை மன்னிப்பதின் மூலம் என்னுடைய மனக்காயத்தை தவிர்ப்பேன்; நான் என்னையே மன்னிப்பதன் மூலம் குற்றவுணர்ச்சியை தவிர்ப்பேன்’ என்பார்.
“அதோடு மட்டுமல்லாமல் உங்கள் நிம்மதியை குலைக்கும் அளவிற்கு, எந்த ஒரு மனிதனுக்கும், நிகழ்விற்கும், அனுபவத்திற்கும் தகுதியே கிடையாது. அப்படி ஒரு உயரிய நிலையை நீங்கள் யாருக்கோ அல்லது எதற்கோ கொடுத்திருந்தால், அது உங்களுடைய முதிர்ச்சியற்ற தன்மையின் வெளிப்பாட்டையே காட்டும். உங்களுடைய நிம்மதியை குலைப்பதற்கான சக்தி இந்த உலகத்தில் எதற்குமே கிடையாது என்பதுதான் உண்மை.

இன்றைக்கு நீங்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்கள் என்றால், அது முழுக்க முழுக்க உங்களுடைய தவறு. கத்தியை எடுத்து யாரோ ஒருவர் உங்களை குத்த வருகிறார் என்றால், அவரிடமிருந்து உங்களை காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் உங்களை நீங்களே குத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், யாரால்தான் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அது யாராக இருந்தாலும் சரி, எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி… உங்கள் மனதில், உங்கள் இதயத்தின் அறைகளில் உட்கார்ந்து அமிலமாய் உங்களை அரித்துக் கொண்டிருக்கும் அந்த நபரை, அந்த நிகழ்வை உங்கள் நிம்மதிக்காக உங்கள் தலையிலிருந்து தூக்கி எறியுங்கள். உங்கள் மனதும், இதயமும் நிம்மதியின் இருப்பிடமாக திகழவேண்டும். உங்கள் நிம்மதியை குலைப்பவர் யாரோ ஒருவர் உட்காரும் இடமாக அது ஒருபோதும் இருக்கவே கூடாது.

உங்கள் நிம்மதியை விலையாக கொடுத்து, நீங்கள் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நிம்மதிக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மறக்க கற்றுக் கொள்ளுங்கள், மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். உடலளவில் மட்டுமல்லாமல்… உள்ளத்தளவில்,
உணர்வுகளின் அளவில், மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
எங்கே அமைதி இல்லையோ, அந்தச் செயல்களில் அர்த்தம் இருக்காது. எனவே வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும்மேல் உங்களின் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வாழ்க்கையில் அமைதி வேண்டுமென்றால், ஒருவரை மதிப்பீடு செய்வதை மிகவும் யோசித்து மெதுவாகச் செய்யுங்கள்; மன்னிப்பு என்று வரும்போது விரைவாக மன்னித்து விடுங்கள்” என்பார் மஹாத்ரயா.
ஏனெனில் மன அமைதியும், மன்னிப்பும் ஒன்றிற்கொன்று நேர்விகித தொடர்புடையது.
ஆகஸ்ட் 5– சர்வதேச மன்னிப்பு தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here