கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு-கைதான வாலிபர்கள் பதுங்கியிருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை;

0
306

கர்நாடக மாநிலம் – மைசூருவில் காதலனை தாக்கி 19 வயதான கல்லூரி மாணவியை 7 பேர் கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிடும்படி கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது22), அரவிந்த்(21), சேவூர் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(26), வடுகபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஜோசப் (28), பூபதி(28) ஆகியோரை மைசூர் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான 6 பேரையும் போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றிரவு கைதான வாலிபர்களை மைசூர் போலீஸ் உதவி கமிஷனர் சசிதர், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீசார் அவிநாசி சேவூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரவர் வீடுகளுக்கு அழைத்து சென்று சில ஆதாரங்களை சேகரித்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசித்தோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விவரங்களை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு அழைத்து சென்றனர்.
மாணவியை பலாத்காரம் செய்து விட்டு தப்பிய 7 பேரும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நந்தியூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஜோசப்பின் பாட்டி வீட்டில் ஒரு வாரமாக தங்கியுள்ளனர்.

இதனால் அங்கு 6 பேரையும் கர்நாடக போலீசார் அழைத்து சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 7 பேரும் சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகள் சிலவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நடித்து காட்டக்கூறி அதனை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் 6 பேரையும் தாளவாடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here