சட்டசபையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்;

0
298

சட்டசபையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். புதிய அறிவிப்புகள் வருமாறு:-

முதியோர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும்.

சமூகத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும், அவர்களின் உரிமைகளை பெற்றுத்தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்.

தாம்பரத்தில் உள்ள சேவை இல்லத்தில் உள்ள கட்டிடங்களை புதுப்பிக்கவும், பயிற்சி அளித்திட ஏதுவாக தளவாட சாமான்களை வாங்கவும் ரூ.1 கோடியே 18 லட்சம் செலவில் துறைக்கான பயிற்சி மையம் ஆரம்பிக்கப்படும்.

தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞர் நீதிக் குழுமங்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் புதியதாக ஏற்படுத்தப்படும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவதற்கு, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும்.

சத்துணவு திட்டத்தில் 1291 சத்துணவு மையங்களுக்கு ரூ.69 கோடியே 24 லட்சம் செலவில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடங்கள் கட்டப்படும்.

1000 சத்துணவு மையங்களில் தோராயமாக ரூபாய் 8000 வீதம் ரூபாய் 80 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய உடல் நிறை குறியீட்டு எண் கணக்கீடு செய்யப்படும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பின், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஊரகப்பகுதி, நகர்ப்புற பகுதி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் தனியார் வாடகை கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாத வாடகை தொகையான ரூ.750, ரூ.3000 மற்றும் ரூ.5000 முறையே ரூ.1000, ரூ.4000 மற்றும் ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அங்கவாடி மையங்களில் பயன்பெறும் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள் குறித்த சுய மதிப்பீட்டு தாள்கள் வழங்கும் திட்டம் மீதமுள்ள 27 ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி பயில வரும் 2 வயது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், எஞ்சியுள்ள 7 மாவட்டங்களான கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 4 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.

மின்வசதி இன்றி அரசு சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் 7757 அங்கன்வாடி மையங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்படும்,.

சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் போதை தடுப்பு மையங்கள் ரூ.76 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் மதுரையில் மண்டல அலுவலகம் மீண்டும் தோற்றுவிக்கப்படும்.

குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாற்றாக, குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் உள்ள 1148 குழந்தைகளுக்கும், மாதந்தோறும் ஒரு குழந்தைக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதி உதவி வழங்கப்படும்.

யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு பயிற்சி மையம் உருவாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here