நாகர்கோவிலை சேர்ந்த ராஜாசிங் -விஜயலட்சுமி தம்பதியரின் மகள் வைஜெயந்தி (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி ஈரோட்டில் அரசு பஸ் மோதிய விபத்தில் அவர் பலியானார்.
இதுதொடர்பாக வைஜெயந்தி குடும்பம் சார்பில், நஷ்டஈடு வழங்கக்கோரி நெல்லை முதலாவது மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு வைஜெயந்தி குடும்பத்துக்கு நஷ்டஈடாக ஈரோடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.12 லட்சத்து 45 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், கோர்ட்டு உத்தரவுப்படி அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோகிலா, அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு ஊழியர் நேற்று நெல்லை தற்காலிக புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் அங்கிருந்து திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு புறப்பட தயார் நிலையில் இருந்த 2 அரசு பஸ்களை ஜப்தி செய்தார்.
பின்னர் அந்த பஸ்கள் போக்குவரத்து கழகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில், வக்கீல் வெங்கடாசலபதி ஆஜரானார்
















