டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.வடக்கு டில்லி பகுதியான ரோஹினியில் உள்ள நீதிமன்றம் நேற்றுக் காலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஒடினர்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு வழக்கறிஞர்கள் போல உடையணிந்திருந்த இருவர், சரமாரியாக சுட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.விபரீதத்தை உணர்ந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில், குண்டுகள் பாய்ந்ததில் கொலையாளிகள் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டை, 10 நிமிடத்துக்குள் நடந்து முடிந்து விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.நீதிமன்ற வளாகத்துக்குள் இரண்டு ரவுடி கும்பல்கள் மோதி கொண்டது விசாரணையில் தெரிந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவதுவழக்கறிஞர்கள் உடையில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல ரவுடி ஜிதேந்திர கோகி. இவர் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. ஹரியானா, உத்தர பிரதேச மாநில போலீசார் இவரை தேடி வந்தனர். இவரது தலைக்கு 6.5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்து. கடந்த ஆண்டு மார்ச்சில் ஹரியானா மாநிலம் குர்கானில் கோகி தன் கூட்டாளிகள் பஜ்வா, கபில், கோய் ஆகியோருடன் பதுங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கு விசாரணைக்காக கோகியை ரோஹினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் கோகி ஆஜர்படுத்தப்பட உள்ளது, அவரது எதிர்கோஷ்டியாக கருதப்படும் தில்லு கும்பலுக்கு தெரிந்தது. இதையடுத்து கோகியை கொலை செய்ய, தில்லு கும்பல் சதி திட்டம் தீட்டியுள்ளது.
அந்த கும்பலை சேர்ந்த இரண்டு ரவுடிகள், வழக்கறிஞர்கள் போல் வேடமணிந்து வந்து கோகியை சுட்டுக் கொன்றுள்ளனர். நீதிபதி இருக்கும்போதே இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும், அருகில் இருந்த அறைக்கு நீதிபதி சென்று சென்று விட்டார்.
பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் சுட்டதில் கொலையாளிகள் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.














