குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சட்டையில் பொருத்திக் கொள்ளும் சிறியரக கேமரா போலீசாருக்கு வழங்கப்படுகிறது;

0
246

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ்காரர் ஒருவரை அரிவாளால் வெட்டிய நிகழ்வும் அரங்கேறியது.
இதேபோல் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும்போது, ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் கோர்ட்டு வரை கூட செல்கிறது. இதுதவிர அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்துகிற போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டங்களின்போது ஒரு சிலர் போலீசாரிடம் அத்து மீறுவதும் உண்டு. அதுபோன்ற சமயங்களில் உண்மை நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியதும் போலீசாரின் கடமையாகிறது.
அவ்வாறான சூழ்நிலைகளில் கையாளுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் தங்களுடைய சட்டையில் பொருத்தி கொள்ளும் வகையில் (பாடி) சிறிய ரக கேமரா பயன்பாட்டுக்கு வந்தது. முதல் கட்டமாக சென்னையில் பரிசோதனை அடிப்படையில் இந்தவகை கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
திருச்சி மாநகரில் பணியாற்றும் ரோந்து போலீசாருக்கு முதல்கட்டமாக 50 சிறியரக கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த கேமராக்களை சட்டையில் பொருத்தி கொண்டு ரோந்து பணிக்கு செல்லும்போது அங்கு நடக்கும் காட்சிகள் அப்படியே கேமராவில் பதிவாகும். அந்த காட்சிகளை வைத்து வழக்குபோடும்போது யார் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள போலீசாருக்கு உதவியாக இருக்கும். இந்த சிறியரக கேமராக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் வீடியோ ஒளிப்பதிவு மூலம் போலீசாருக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here