வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக களப் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில் 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில் 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தற்போதைய பெரு வெள்ளத்திலும், மழை பெய்து கொண்டிருந்த போதும், போர்க்கால அடிப்படையில், குப்பையை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, மழை நீர் தேங்கியுள்ள இடங்கள் தவிர, பெரும்பாலான இடங்களில் குப்பை அகற்றப்பட்டு விட்டது.
இப்பணி செய்தவர்களை ஊக்குவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.எனவே, முதல்வர் கவனம் செலுத்தி, களப்பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும், தலா, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.















