குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மாவட்ட அளவில் மிகவும் புகழ் பெற்றது வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் தேரோட்டம் அதன் நிலையிலே பூஜைகள் செய்து நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுஇந்தாண்டு தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி தேர் திருவிழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் விழா கமிட்டி சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று காலையில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்- சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேர் நிலை வரை பக்தர்களுடன் கொண்டு கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
தேரோட்டத்தை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராசன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம்,நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி,தாசில்தார் லலிதா,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,நகரமன்ற உறுப்பினர்கள் கே.வி. கோபாலகிருஷ்ணன்,ஜி.எஸ். அரசு,முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.பாஸ்கர்,தேர் கமிட்டி தலைவர் எம்.எஸ். அமர்நாத்,கௌரவ தலைவர் வி. பிச்சாண்டி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
42 அடி உயரமும் பல டன் எடை கொண்ட இந்த தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மாவிளக்கு கொண்டுவந்து தீபாராதனை செய்தனர், நேர்த்தி கடனுக்காக மிளகு மற்றும் உப்பு தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் அன்னதானமும்,தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் மின் பணியாளர்கள் வழிநெடுகிலும் தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின்சார கம்பிகளை துண்டித்து தேர் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன்,உதவி ஆணையர் விஜயா கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு உள்பட திருத்தேர் கமிட்டியினர், இளைஞர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.















