அரசு வேலைவாய்ப்பு என்பது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பு வெளியாகும். அதுவும் அந்த வேலைவாய்ப்பில் கேட்டிருக்கும் பதவிக்கு விண்ணப்பிக்க, படிக்க, தங்களை தயார் செய்ய ஒரு காலம் பிடிக்கும். அதற்குப் பிறகு எழுத்துத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு அந்தப் பதவியில் போய் அமருவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகிவிடுகிறது.
ஆனால், தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அப்படியில்லை. தினந்தோறும் வேலைவாய்ப்பு வருகிறது. பெரும்பாலும் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை. பயோ டேட்டா, சான்றிதழ்கள், கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் போதும் நிச்சயம் வேலை என்ற நிலைதான் தற்போது இருந்துகொண்டிருக்கிறது. அதுவும் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது, அர்ப்பணிப்புடன் கூடிய வேலை, காலம் தவறாமை, தலைமைப் பண்பு, அனுசரித்தல் போன்ற காரணிகளையே எதிர்பார்க்கின்றன. இந்தக் காரணிகளில் எவர் ஒருவர் திறமையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கைமேல் பணி. இது நிச்சயம்.
இந்தக் காரணிகளை உங்களிடம் இருந்து எதிர்õர்ப்பதற்கு முன் உங்களைப் பற்றிய நல்ல விஷயங்கள், உங்களைப் பற்றிய குணாதிசயங்கள் அவர்களுக்கு பிடித்த வகையில் இருக்கவேண்டும். அதை குறிப்பால் உணர்த்தும் ஒரு விஷயம்தான் பயோடேட்டா. உங்களைப் பற்றி உங்களது அபிப்ராயங்களும், மற்ற நிறுவனங்களில் நீங்கள் பெற்ற சன்மானமும், பணிக்காலமும்தான் உங்களைப் பற்றி நல்லெண்ணங்களை புதிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளை எந்த ஒரு விண்ணப்பதாரர் பூர்த்தி செய்கிறாரோ அவருக்கு வேலை நிச்சயம். இதை மறுப்பதற்கில்லை.
றுபரு நகரங்களை பொறுத்தவரையில் பயோ டேட்டாவை தயாரித்து தருவதற்காகவே பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து அவர்களின் அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, நிறுவனங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பயோ டேட்டாவை தயார் செய்து கொடுக்கின்றன. இந்தப் பணிக்கு சேவைக் கட்டணங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வசூலிக்கின்றன.
பயோ டேட்டா தயார் செய்வது அவ்வளவு பெரிய கம்ப சூத்திரமா என்று கூட நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. கம்ப சூத்திரம் இல்லவே இல்லைதான். ஆனால், அதை நேர்த்தியாக தயாரிப்பதில் சில அடிப்படை விஷயங்கள் நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும்தான்.
பயோ டேட்டாவைப் பொறுத்தவரையில் இரண்டு வகையான விஷயங்கள் இருக்கவேண்டும். மைக்ரோ டீடெய்ல்ஸ், மேக்ரோ டீடெய்ல்ஸ். வர்த்தக ரீதியிலான குறியீடு மொழியாக இருந்தாலும், தனியார் வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
மேக்ரோ டீடெய்ல் என்பது விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, திருமணம் ஆனவரா, இல்லையா, பிறந்த தேதி, தந்தையார் பெயர், அடிப்படை கல்வித் தகுதி, உயர்ந்தபட்ச கல்வித் தகுதி, முன் அனுபவம், விண்ணப்ப முகவரி உள்ளிட்ட தகவல்கள் இருப்பதுதான் மேக்ரோ டீடெய்ல் என்பது.
மைக்ரோ டீடெய்ல் என்பது உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஆழமான விஷயங்களை உண்மைத் தன்மையுடனும், ஆதாரப்பூர்வமாகவும் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.
அதாவது அடிப்படை கல்வித் தகுதியை பொறுத்தவரையில் கல்வித் தகுதியுடன் அதில் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிடலாம். அதிகபட்ச கல்வித் தகுதியை குறிப்பிடும்போது அதில் நீங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச அல்லது மாநில, தேசிய அளவில் விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்ட அனுபவங்களைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக சொல்லலாம்.
முன் அனுபவம் பற்றி குறிப்பிடும்போது, நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களைப் பற்றிய பட்டியல்களை குறிப்பிடும் அதே நேரத்தில், அந்த நிறுவனங்களில் உங்களது பணி என்ன என்பதை குறிப்பிடுவதோடு, அந்தப் பணியின் முக்கியத்துவம், அதில் உங்களின் பங்கு முக்கியத்துவம், அதில் நீங்கள் சாதித்த விஷயங்கள், உங்களின் மூலமாக நிறுவனத்திற்கு கிடைத்த லாபம், நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றியும் சுருக்கமாக புள்ளி விவரங்களோடு சொல்ல வேண்டும். அதேபோல ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றதற்கான காரணத்தை நம்பும் வகையில் சொல்ல வேண்டும்.
எதிர்பார்க்கும் சம்பளத்தைப் பற்றி குறிப்பிடும்போது, முந்தைய நிறுவனத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விவரங்கள், பதவி உயர்வுகள் பற்றி குறிப்பிடுவதை மறந்துவிடக்கூடாது. கூடவே முன்பு பணிபுரிந்துகொண்டிருக்கும் அல்லது தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவனத்தில் விண்ணப்பதாரர் பெற்ற ஊதிய விவரங்களை சரியாகவும் ஆதரப்பூர்வமாகவும் சொல்ல வேண்டும்.
ஏனெனில் நீங்கள் தரும் அடிப்படையில்தான் உங்களின் குணாதிசயங்கள் சோதிக்கப்படுகிறது என்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும் மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு கிடைக்கப் போகும் பணிக்கு நீங்களே முழுக் காரணமாகவும் இருக்கிறீர்கள் என்பதை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் மறந்துவிடாதீர்கள். சிறந்த பயோ டேட்டாவை உருவாக்குங்கள். சிறந்ததொரு வேலையைப் பெறுங்கள். வாழ்த்துகள்.










