“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்”
சில நேரங்களில் நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்காததே, உங்கள் வாழ்க்கையின் சிறந்த விஷயமாக அமையலாம். உங்களுடைய கலைந்துபோன கனவுகளே, உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறலாம். விமான போர்ப்படைப் பிரிவில் பைலட்டாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். எட்டு பணியிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், தகுதிச் சுற்றில் அவருக்கு ஒன்பதாவது இடம் கிடைக்க, அவரின் கனவு சுக்கு நூறாகிப் போகிறது. ஆனால், அதுவே அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக, ஏன்! இந்திய தேசத்தின் திருப்புமுனையாக மாறியது. அவருடைய அந்தக் கனவு மட்டும் நிறைவேறியிருந்தால், நமது இந்திய தேசம் ஒரு தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனரை, ஏவுகணை நாயகரை, சிறந்த ஆசிரியரை, இளைஞர்களின் முன்னோடியை கண்டெடுத்திருக்க முடியாது.
விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையாகக் கருதப்படும் அவர், மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்திய அரசியல்வாதிகளிடம் அவர் அடிக்கடி எடுத்துரைத்த ஆலோசனை இதுதான் – “தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அதுதான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்”. டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து, இருதய நோயாளிகளுக்கு எடை குறைந்த ஸ்டென்ட் கருவியையும், போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோலையும் உருவாக்கிய அவர், அறிவியல் மூலம் எல்லாவற்றிற்கும் தீர்வு காண முடியும் என்று திடமாய் நம்பினார்.
பொக்ரான் அணு ஆயுதச் சோதனையின் மூலம், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அவர், 5 ஏவுகணைத் திட்டங்களில் பணிபுரிந்து இருக்கிறார். அவர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய போதும் சரி, குடியரசுத் தலைவராக பணியாற்றிய போதும் சரி, காலை 5 மணியிலிருந்து, இரவு 11 மணி வரை வேலை செய்வார். வேலையே வழிபாடாக, வாழ்க்கையையே பிரார்த்தனையாக இறைவனுக்கு அர்ப்பணித்த அவருக்கு, தன் உயிருக்குயிரான மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போதே இறைவனிடமிருந்து அழைப்பு வந்தது. “என்னுடைய இறப்பு நாளை விடுமுறை நாளாக அறிவிக்காதீர்கள். நீங்கள் என்னை நேசித்தால் அந்த வாரத்தில் இன்னும் ஒருநாள் கூடுதலாக வேலை செய்யுங்கள்” என்ற வார்த்தைகள் அவருடைய உழைப்பின் மகத்துவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதனால்தான், இந்திய அரசின் மிக உயரிய பாரத ரத்னா, பத்மபூஷன் பட்டங்கள் மட்டுமல்லாமல், உலகின் பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு 4௦ டாக்டர் பட்டங்கள் வழங்கி கவுரவித்திருக்கின்றன. வேலையைப் போற்றிக்கொண்டாடும் உங்களை உலகம் போற்றிக் கொண்டாடும் என்பது உண்மைதானே!
“எந்த செயலை செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்யுங்கள்; இல்லையென்றால் எதுவுமே செய்ய வேண்டாம்” என்ற வரிகளுக்கு அவர் வாழ்க்கையே உதாரணம். மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் அவர், புத்தகங்களை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கக்கூடியவர்.
‘ஜனாதிபதி’ என்ற நாற்காலிக்கு கடலளவு பெருமை சேர்த்தவர் கலாம். அவரது பதவிக்காலம் முடிந்தபிறகும், “மக்களின் ஜனாதிபதி” என்று அன்பாக அழைக்கப்பட்டார். 19ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் விவேகானந்தர், 2௦ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் மகாத்மா காந்தி… இவர்களின் வரிசையில் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்று போற்றப்படுகிறார்.
“இளம் வயதினருடன் இருக்கும்போது, குறிப்பாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன்” என்று பல முறை குறிப்பிட்டிருக்கிறார். 2020ல் வல்லரசு இந்தியாவை கனவு கண்ட அவர்… “கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்” என்று இந்திய இளைஞர்களுக்கு கனவு காண கற்றுக் கொடுத்தார். அவருடைய 79வது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் அவை, உலக மாணவர் தினமாக அறிவித்தது பொருத்தமான விஷயம்தானே!
சில நேரங்களில் கனவு கண்டவர்கள் கூட அந்த கனவின் முழு சக்தியை அனுபவிக்க முடியாது. 2௦2௦ல் வல்லரசு இந்தியாவை கனவு கண்ட அவர் இறைவனின் கனவில் கலந்து விட்டாலும், இந்தியாவின் இளைய தலைமுறை நிச்சயம் அவர் கனவின் வழி பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாருங்கள்! கலாமின் கனவு காணுவோம்; அந்தக் கனவை நனவாக்க பாடுபடுவோம்.
ஜூலை 27, டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு நாள்.











