இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தூய்மை பணி என்பது தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வரும் சூழலில் அதில் லட்ச கணக்கில் முறைகேடும் நடந்து வரும் சூழலில் மீண்டும் கூடுதலாக 36 பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் அதே பணியில் ஈடுபடுத்தி கொள்ள ரூபாய் 84 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டதையொட்டி இப்பணிக்கென மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 குடும்பங்களை சார்ந்த ஆண்களும் பெண்களுமாக 15 தொழிலாளர்கள் சமீப ஒரு மாத காலமாக அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு 12 ஆயிரம் என்றும் பெண்களுக்கு 10 ஆயிரத்து 500 – என்றும் குறைந்த பட்ச கூலியில் முறையான பணி பாதுகாப்பு இல்லாமலும் தங்கும் வசதி, கழிப்பிட வசதி, குளிக்கும் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி ஆடு, மாடுகளை போல் இன்னும் சுருக்கமாக சொல்வதானால் கொத்தடிமைகளை போல் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ஒருசெட்டில் தங்க (அடைத்து) வைக்கப்பட்டுள்ளனர் என்றே சொல்லலாம்.
இச்சூழலில் நேற்று 22/01/2025 அன்று இரவு மேற்படி 7 குடும்பத்தினரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனி தகர செட்டுகளில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் இரவு சுமார் 1.30 மணியளவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த அறையின் பின்பக்கம் இருந்த கதவு இல்லாத ஜன்னல் வழியாக ஒரு கம்பியை கொண்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த 7 வயது சிறுமியை எழுப்ப முயற்சித்து உள்ளனர். அத்துடன் நில்லாது கதவு இல்லாத அந்த கட்டிடத்திற்குள் உள்ளே நுழைந்த ஒருவன் தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று கொண்டிருந்த அந்த குழந்தையை தூக்கி செல்லவும் முயற்சித்து உள்ளான். அப்போது அந்த சிறுமி பயத்தில் அலறவே தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறியடித்து எழுந்துள்ளனர். அதனை பார்த்து ஓட முயன்ற அந்த நபரையும் பிடித்தும் உள்ளனர். அதனை தொடர்ந்து மேற்படி நபர் ஏதோ ஒரு வகையில் தப்பி சென்றுள்ளதாக. தெரிகிறது. இந்த தகவல் ஒப்பந்ததாரரிடம் சூபர்வைசராக பணிபுரியும் நபருக்கு தெரிவிக்கப்பட்டு அவரும் 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து விட்டதாக கூறுகிறார்.
ஆனால் அதன் பிறகு நடந்துள்ள சம்பவங்களை கேள்விப்படும் பொழுது அது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் குறித்து அப்பொழுதே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தால் தப்பி ஓடிய நபர்களை அந்த நேரத்திலேயே பிடித்து இருக்கலாம். அதை அந்த ஒப்பந்ததாரர் செய்ய தவறியது ஏன் என்பது புரியவில்லை.
அடுத்து மறுநாள் அதாவது இன்று 23/01/2025 காலை சுமார் 10 மணிக்கு மேல் கோவில் காவல் சார்பு ஆய்வாளர் திரு . உக்கிரபாண்டி அவர்கள் கவனத்திற்கு ஒப்பந்ததாரர் (பொறுப்பு ) திரு. கோபி என்பவர் கொண்டு சென்று உள்ளார். அடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட நபரின் போட்டோவும் அனுப்ப பட்டும் உள்ளதாக தெரிகிறது . இத்துணைக்கும் பிறகும் கூட கோவில் சார்பு ஆய்வாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளியை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியினை மேற்கொள்ளாதது மட்டுமன்றி இந்த சம்பவத்தையே தனது மேலதிகாரிகளுக்கு கூட தெரிவிக்காமல் மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுப்படிருப்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விசயமாக. உள்ளது.
ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் இளஞ்சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சம்மந்தமான செய்திகள் வந்து கொண்டிருப்பதும் அதனை தொடர்ந்து ஆளும் அரசுகளும் மாண்புமிகு நீதிமன்றங்களும் இது விசயத்தில் தண்டனையை மிகவும் கடுமையாக்கி வருவதும் தொடர் நிகழ்வாக இருந்து வரும் சூழலில் 7 வயது சிறுமி அதுவும் வட மாநில சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தமிழகத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் எத்தகைய விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டிய விசயமல்ல.
எனவே இது விசயத்தில் மரியாதைக்குரிய காவல் துறை நிர்வாகம் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமன்றி இந்த விசயத்தையே மூடி மறைக்க முயன்ற கோவில் காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு : இது விசயத்தில் நடைபெற்றுள்ள தவறுகளை மூடி மறைக்க முயன்றவர்களை கண்டித்தும் இராமேஸ்வரம் நகராட்சியின் பொறுப்பபற்ற நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும் இன்னும் ஓரிரு தினங்களில் எங்களின் சிஐடியூ தொழிற்சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பிலும் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவண்
இந்திய தொழிற்சங்க மையம் (CITU)
இராமேஸ்வரம் ஒருங்கிணப்பு குழு















