உ.வே.சா.வின் பிறந்த தினம் – பிப்ரவரி 19.

0
318

வாழ்க்கை என்பது சிலருக்கு அனுபவம், சிலருக்கு சவால். இரண்டும் ஒன்றுதான் என்றாலும் நாம் பார்க்கும் அந்த பார்வைதான் ஒன்றை இரண்டு பரிமாணங்களாக காட்டுகிறது. வாழ்க்கையை அனுபவமாக எடுத்து வாழ்ந்தவர்கள் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
வாழ்க்கையை அனுபவமாகவும், பணியே வரமாகவும் பார்த்தவர்தான் இவரும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படித்தியிருந்த காலம் அது. இவர் சிறுவனாக இருந்தபோது, ஒரு சமயம் அவர் தாத்தா சிறுவனை அழைத்திருக்கிறார். “குழந்த… இங்கிலீஷ் நல்லா படிச்சா.. நாம வாழ்ற இந்த லோகத்துல வசதியா வாழலாம். சமஸ்க்ருதம் நல்லா படிச்சா, கடைசியா நாம போய் சேரப்போற லோகத்துல நல்லா இருக்கலாம். அதனால் நான் சொல்றேன்… ஆங்கிலத்தை நல்லா படி.”
சிறுவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
“என்னடா குழந்த… நான் சொல்றது உனக்கு புரியுதா.. இல்லையா..?”
“தாத்தா நான் ஒண்ணு சொல்லட்டுமா…”
“சொல்லுடா குழந்த…”
”தாத்தா.. இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்துல நல்லா வாழலாம். சமஸ்க்ருதம் படிச்சா அந்த லோகத்துல நல்லா வாழலாம். தமிழ் நல்லா படிச்சா.. இந்த லோகத்துலேயும் சரி, அந்த லோகத்துலேயும் சரி இரண்டு லோகத்துலேயும் நல்லா வாழலாம்…”
பேரனின் இந்த வார்த்தைகள் தாத்தாவை அந்த நேரத்தில் சங்கடத்தைதான் ஏற்படுத்தியது.
அந்த குழந்தை யார் தெரியுமா..?
அவர்தான், தமிழை உயிராய் நேசித்த, உ.வே.சாமி நாதைய்யர் என்று அழைக்கப்படும் தமிழ் தாத்தா.
கொள்கைகள் என்று வந்துவிட்டால், பாறை போல திடமான மனஉறுதியோடு செயல்பட வேண்டும். அந்த வார்த்தைக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் உ.வே.சா. இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் உ.வே.சா கல்வி கற்பதற்கும் அவரின் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து, வாய்ப்புகளைத் தேடியலைந்துள்ள போதிலும் மனம் தளராமல், எவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டுள்ளார்.
சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிகிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணமானவர் உ.வே.சா.தான்.
உ.வே.சா. தமிழுக்கு ஆற்றியத் தொண்டு மிகப்பெரியது என்றாலும், தந்தையாரின் வருமையைக் கண்டு, ஒரு பெரிய மனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று கேட்டு, அதற்காக அவர் இயற்றிய செய்யுள் தான் இவரின் முதல் படைப்பு.
அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடி கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும் நன்று படித்து ஒப்பிட்டுப்பார்த்து, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழுவடிவத்தையும் தேடிக்கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், எந்தவொருசொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உவேசா எதையும் பதிப்பிப்பதில்லை. அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகன போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான் மைல்களை உவேசா பயணம் செய்துள்ளார். தங்துவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாக பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பித்தார்.
பொது நல நோக்குடன் செய்யப்படும் எந்தவொரு வேலையும் கடவுளின் வேலையை செய்வதற்குச் சமமாகும் என்று சொல்வதைப்போல வாழ்ந்தவர் உ.வே.சா.
புறநானூறு, சீவக சிந்தாமனி, பத்துப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நூல்களை முழுமையாக பதிப்பித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு இலக்கண நூல்களையும் உ.வே.சா. படைத்துள்ளார்.
தமிழ் இருக்கும் நாள்வரை உ.வே.சா. வின் பெயரும் இருக்கும் அளவிற்கு, கர்மமே வாழ்க்கையாக வாழ்ந்த கர்மயோகி அவர்.
கற்கும் நேரத்திற்கு வரையரை இல்லை. ஆசிரியர் சொல்வது மட்டும் பாடம் இல்லை. ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு பாடம் என்று உலகத்திற்கு கூறிய உ.வே.சா.வின் பிறந்த தினம் – பிப்ரவரி 19.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here