ரமண மகரிஷி பிறந்ததினம் – டிசம்பர் 3௦,

0
271

அவரிடம் வந்த ஒரு பக்தர், “எங்களோட பிரச்சினையெல்லாம் உங்ககிட்ட வந்தா சரியாயிடுது. உங்களுக்குப் போய் எப்படி இவ்ளோ பெரிய வியாதி வந்தது” என்று கேட்க அதற்கு புன்னகையுடன், “நீங்க கொண்டு வரும் குப்பையை எல்லாம் இங்கேதானே கொட்றீங்க…” என்று பதில் சொன்னாராம். நம் பாவங்களை சிலுவையாய் சுமந்து நமக்காக உயிரைத் துறந்த அந்தத் தேவதூதனைப் போல, ஆன்மீக ஒளியின் உண்மை அம்சமாய் விளங்கும் ஒவ்வொரு ஆன்மீக வழிகாட்டியும், பக்தர்களின் பாவங்களை தம்முடைய பாவங்களாக ஏற்று நல்வழியில் அவர்களை வழிநடத்துகின்றனர்.
பின்னொரு கட்டத்தில் தன் முதுகில் இருந்த கேன்சர் கட்டியை மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவதற்கு அனுமதி அளித்த அவர், ‘ரத்தமும் சதையும் நிறைந்த இந்த உடல் நான் அல்ல, அழிவில்லாத ஆன்மாவே நான், எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஈஸ்வரப் பிரக்ஞையே நான்’ என்ற உயரிய விழிப்புணர்வுடன் மண்ணுலக வாழ்க்கையை வாழ்ந்தார்.
‘நான்’ என்பது இயல்பு நிலை. ‘நான்’ என்பது அனைத்து ஜீவராசிகளின் இருப்பு நிலை. ‘நான்’ என்ற அந்தப் பிரபஞ்ச உணர்வு மட்டும் இல்லையென்றால், இந்த உலகத்தில் உயிர்கள் இல்லை. இயக்கமும் அதுவே. இயங்க வைப்பதும் அதுவே. இயங்குவதும் அதுவே. அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் நிறைந்திருக்கும் ‘நான்’ என்ற பிரபஞ்ச உணர்வே நமக்குள்ளும் நிறைந்திருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், எங்கும் நிறைந்திருக்கும் ‘நான்’ என்ற அந்தப் பிரபஞ்ச உணர்விற்குள்தான் நாம் இருக்கிறோம்.
ஆனால், அதை நாம் கண்ணால் பார்க்க முடியாது. கையால் தொட முடியாது. சொல்லப்போனால் அது தேடிக் கண்டுகொள்ளும் பொருளும் அல்ல. ஏதோ ஒன்றைத் தேடிப்போகலாம். எல்லாமுமாய் இருந்து, அதே சமயத்தில் ஒன்றுமில்லாமல் இருக்கும் அதை எப்படித் தேடிப்போவது? அது நாம் அனைவரும் மறந்து போன பொருள். நாமே அதுவென்று தெரியாமல் மறைந்து கிடைக்கும் பொருள்.
அவர் அந்த மறைபொருளை தேடிப் போகவில்லை. அது முன்ஜென்மங்களின் புண்ணியமாய் வந்து சேர்ந்த புதையல் என்றே கருதினார். உண்மை தேடிவந்து அவரிடம் சரணாகதி அடைந்தது. பால்மனம் மாறாத இளமைப் பருவத்தில், ஞானம் தேடி வந்து அவர் வாயிற் கதவைத் தட்டியது. மரணம் என்ற உணர்வு மனதில் பயத்தை ஏற்படுத்தாமல், “நான் யார்” என்ற கேள்வியை மட்டுமே அவருக்குள் எழுப்பியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கேள்வியும் மறைந்து ஒன்றுமில்லாத பிரபஞ்ச உணர்வு மட்டுமே அங்கே விஞ்சி நின்றது. அந்த நிமிடத்தில் ரத்தமும் சதையுமாக இருந்த வேங்கடராமன் என்ற மாயை (அஞ்ஞானம்) அழிந்து, அங்கே ஈஸ்வரன் (ஞானம்) உயிர்பெற்றார். அங்கே ஆன்மீக மறுபிறப்பு நிகழ்ந்தது. ‘ரமண மகரிஷி’ பிறப்பெடுத்தார். புதிய பயணம் தொடங்கியது. அதுவே பாதையானது. அவர் காட்டிய ‘ஆத்ம விசாரம்’ என்ற அந்த ஞான மார்க்கத்தின் பாதையில் இன்று உலகம் உண்மையைத் தேடிப் பயணிக்கின்றது.
அகத்தில் எப்போதும் தன்னுடைய ஈஸ்வரனுடன் இணைந்திருந்த அவர், பரிசுத்தம், சீரான உடை, சுற்றி இருப்பவருடன் எல்லாவற்றையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல், கால அட்டவணையை வழுவாமல் பின்பற்றுதல், எந்த ஒரு சின்ன வேலை ஆனாலும் அர்ப்பணிப்புடன் அந்த வேலையைச் செய்தல், அரைகுறையாக எந்த ஒரு வேலையையும் கைவிடாமல் இருத்தல், ஒவ்வொரு செய்கையிலும் குறையற்ற முழுமையை நாடுதல், உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இடைவிடாத உழைப்பு, அனைவரையும் சம்மாக எண்ணுதல், எப்போதும் உண்மையே பேசுதல் போன்ற பண்புநலன்களைக் கொண்டிருந்தார். உண்மையைப் பேசுவதால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என்றால் அதைப் பேசாமல் மவுனமாக இருக்க வேண்டும், சிறு வேலை ஆனாலும் தன்னால் முடியும் என்றால் மற்றவர்களை செய்யச் சொல்லக்கூடாது, மற்றவர்களின் மேல் பழி சுமத்தாமல் தோல்விகளின் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ள வேண்டும், பிறருடைய அமைதியை குலைக்கக் கூடாது, பிறர் விஷயத்தில் தலையிடக்கூடாது என புறவாழ்க்கையில் பல்வேறு அறநெறிகளைக் கொண்டிருந்தார். அவற்றை தானும் கடைப்பிடித்து, தன் சீடர்களையும் தன் செயல்களின் மூலம் வழிநடத்தினார்.
நம்முடைய இந்திய தேசத்தின் உயிர்நாடி ஆன்மிகம். இன்று நமது நாடு வல்லரசு நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், வல்லரசு நாடுகளையும் ஆன்மீக ஒளிக்கு இட்டுச் செல்லும் ஆத்ம வலிமையும், வழிகளும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது. அந்த ஆன்மீக ஒளிதான் நம்முடைய இந்திய தேசத்தையும் வல்லமை மிக்க நாடாக மாற்றப்போகிறது. தானங்களில் சிறந்த தானம் தம்ம தானம் என்பார்கள். அதாவது ஆன்மீக அறிவை, புரிதலை, பயிற்சிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தானம்தான் ‘தம்ம தானம்’. ஆன்மீக வழிகாட்டிகள் தங்களுடைய தூய்மையான மனதாலும், உயரிய விழிப்புணர்வாலும், அளப்பரிய சக்தியாலும், அதிர்வலைகளாலும் வலிமை வாய்ந்த காந்தம்போல மற்ற நாட்டினரையும் கவர்ந்து இழுக்கிறார்கள்.
இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த நாம், அறியாமை இருளில் மூழ்கி மாயையின் பிடியில் சிக்கி வாழ்தல் நலம் ஆகுமோ? உடல் மறைந்தும் உயரிய விழிப்புணர்வாக மனித குலத்திற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அந்தப் புண்ணிய ஆத்மாவின் வழியினாலும் அருளினாலும் நாமும் விழிப்புணர்வுடன் வாழ முயற்சிப்போம். நீண்ட நெடிய பயணம்தான்… நிச்சயம் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்.
நடக்கும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த உயரிய பிரக்ஞையே உண்மையான கண்கள். அந்தக் கண்களே எல்லையில்லாத பிரபஞ்சத்தின் கண்கள் – ரமண மகரிஷி.

டிசம்பர் 3௦, ரமண மகரிஷி பிறந்ததினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here