சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ்(28) என்ற வாலிபர் கடந்த 10 ஆம் தேதியன்று தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்குபதிவு செய்தி 5 க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட தங்கம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடிவந்துள்ளார். அங்குள்ள முதல் தளத்தில் வசித்து வந்த அவருக்கு தரைதளத்தில் வசித்து வரும் அப்பு மற்றும் அவருடைய மனைவி மோனிசா உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மோனிசாவின் தோழியான திருவொற்றியூரை சேர்ந்த விக்டோரியா அடிக்கடி மோனிசாவை பார்க்க வரும்போது அவருக்கும், தங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விக்டோரியா தங்கத்திற்கு அடிக்கடி செலவிற்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த விக்டோரியாவின் காதலரான பாலாஜி என்கிற அரைசட்டை பாலாஜி தங்கத்திடம் தட்டிகேட்டி சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு விக்டோரியா மோனிசா வீட்டிற்கு அங்கு தங்கத்தையும் பார்த்துவிட்டு சென்றுள்ளார். அவர் சென்றபிறகு மோனிசா வீட்டில் இருந்த செல்போன் மற்றும் பணம் மாயமாகி இருந்துள்ளது.
இந்நிலையில் கொலை நடந்த சம்பவத்தன்று விக்டோரியாவும், மோனிசாவும் ஆர்கே நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பணம் மற்றும் செல்போன் காணாமல் போனது தொடர்பாக சண்டையிட்டுள்ளனர். இதில் மோனிசாவிற்கு ஆதரவாக அவருடைய கணவர் அப்பு, அப்புவின் நண்பர் ஷ்யாம் மற்றும் அரைசட்டை பாலாஜி உட்பட சிலரும், விக்டோரியாவிற்கு ஆதரவாக தங்கம் மற்றும் சிலரும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மோனிசா உடன் சண்டை முடிந்த நிலையில் விக்டோரியா நண்பர் ஒருவருடன் கொடுங்கையூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் தங்கம் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் மோனிசா, அவருடைய கணவர் அப்பு, அப்புவின் சகோதரரான மற்றொரு அப்பு, ஷ்யாம், அரைசட்டை பாலாஜி ஆகியோர் மோனிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் அங்கு தனியாக இருந்த தங்கத்திடம் விக்டோரியாவின் காதலரான அரைசட்டை பாலாஜி விக்டோரியாவின் பழக்கத்தை கைவிட மாட்டாயா எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருதரப்பு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரைசட்டை பாலாஜி மற்றும் உடன் இருந்தவர்கள் தங்கத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் மோனிசாவின் கணவரான அப்பு, ஷ்யாம் மற்றும் அரைசட்டை பாலாஜியை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அப்பு மற்றும் ஷ்யாம் ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர் மேலும் அரைசட்டை பாலாஜி மீது அடிதடி, வழப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
20 நாள் ஏற்பட்ட பழக்கத்தால் ஆர்கே நகர் பகுதியில் கொலை நடந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது












