சென்னை: தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்த சென்னை புறநகர் ரயிலும், எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தை தவிர்க்க இரு ரயில்களும் எழும்பூர் – சேத்துபட்டு இடையே நிறுத்தப்பட்டதால் விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு ரயில் என்று ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளிகள் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பெண்கள், வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் புறநகர் ரயிலை நம்பியே இருக்கின்றனர்.இதுதொடர்பாக விசாரிக்கையில் தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்த ரயிலும், எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்திருக்கின்றன.இந்த இரு ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், மற்ற புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணமாக சொல்லப்படுகிறது. திடீரென புறநகர் ரயில் இயங்காததால், பயணிகள் பலரும் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் ரயில்வே நிர்வாகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.















